மலையை பிள! எலியை பிடி! அடுத்த அதிரடிக்கு தயாரான விஷால், ஞானவேல்ராஜா!
யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ… அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது பர்பாமென்ஸ். அப்படியாப்பட்ட விஷாலுடன் கூட்டு சேர்ந்து விட்டார் ஸ்டூடியோ க்ரீன் முதலாளியும், சூர்யாவின் உறவினரும், அவரை வைத்து பல படங்களை தயாரித்தவருமான ஞானவேல்ராஜா. காரணம்… அவரது 24 படத்தையும், தோழா படத்தையும் திருட்டு விசிடி எடுக்க உதவியது யார் என்பது தெரிந்தும் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இருவரும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அடுக்கடுக்காக புகார்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டர்காரர்களே இப்போது திருட்டு விசிடி எடுக்க ஆரம்பித்திருப்பதை உடனே தடுத்தாக வேண்டும். எந்தெந்த தியேட்டர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்பதை ஆதாரத்தோடு சொல்லியும் தயாரிப்பாளர் சங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 படத்தை தம் தியேட்டர் மூலம் திருட்டு விசிடி எடுக்க உதவிய பிவிஆர் சினிமாஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் விஷால். பல தியேட்டர்களில் ஆபரேட்டர் அறைகளில் இருந்தே திருட்டு விசிடி எடுக்கப்படுவதாகவும் கூறினார் அவர்.
ஓரியன் பி.வி.ஆர். மால் தியேட்டரில்தான் தெறி படத்தின் திருட்டு விசிடி எடுக்கப்பட்டது. அது தெரிந்தும் சங்கம் அமைதியாக இருக்கிறது. அதுதான் ஏனென்று புரியவில்லை என்றார் ஞானவேல்ராஜா.
இவ்விருவரின் கூட்டணி மலைகளை பிளந்து, எத்தனை எலிகளை வேட்டையாடப் போகிறதோ? செய்ங்க செய்ங்க… வச்சு செய்ங்க!