மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்களாமே? விஷாலை அலற வைத்த கேள்வி!

பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை, இப்போதுதான் அவரது ஜாதகத்தில் பணவரவு நேரம். இந்த கொண்டாட்ட நேரத்தில் அதி முக்கிய விஷயமாக அவர் கருதுவது, இன்டஸ்ட்ரிக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பதைதான். முதல் கட்டமாக நடிகர் சங்கத்திற்கு பில்டிங் கட்டியே ஆக வேண்டும் என்கிற முயற்சி. அதில் ஆயிரம் இடியாப்ப சிக்கல்கள் இருந்தாலும், விடுவதாக இல்லை விஷால். இதை தனது பிறந்த நாள் பிரஸ்மீட்டில் ரொம்ப தைரியமாகவே எடுத்து வைத்தார் அவர்.

‘நான் நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கோ, செயலாளர் ராதாரவிக்கோ எதிரானவன் இல்ல. எம்ஜிஆர் சிவாஜி ரெண்டு பேரும் நாடகத்தில் நடிச்சு வந்த பணத்தில் கட்டிய இடம் அது. இன்னைக்கு எல்லா சங்கங்களுக்கும் சொந்தமா பில்டிங் இருக்கு. ஆனால் நடிகர் சங்கத்துக்கு மட்டும் இல்ல. நான், ஆர்யா, கார்த்தி, ஜித்தன் ரமேஷ், ஜீவா எல்லாரும் சேர்ந்து ஒரு படத்தில் இலவசமா நடிச்சு அதில் வர்ற பணத்தை வச்சு அங்கு பில்டிங் கட்டப்போறோம். என் உயிரே போனாலும் இதை முன்னின்று செய்வேன்’ என்றார் உறுதியாக.

‘நடிகர் சங்க விஷயத்தில் உங்களுடைய பேச்சை கேள்விப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர், அந்த பையன் நியாயமாதானே பேசுறான் என்று விமர்சித்தாராமே, கேள்விப்பட்டீங்களா?’ என்றொரு மூத்த நிருபர் கேட்க, சட்டென வலைக்குள் சிக்காமல் பதில் சொல்ல ஆரம்பித்தார் விஷால். ‘நானும் அந்த விஷயத்தை தினமலர்ல படிச்சேன். பட்… எனக்கு தெரியாது. அதுக்காக நான் ஏதோ அரசியல் சாயம் பூசிக்கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீங்க. அரசியலில் நுழையாமலே நிறைய நல்லது செய்ய முடியும்’ என்றார் விஷால்.

அதற்கப்புறம், நிறைய நிறைய நிறைய… பேசினார் விஷால். படக்கென்று வாயை அடைத்தது அந்த கேள்வி. ‘அதெல்லாம் விடுங்க. கல்யாணம் எப்போ?’

‘அடுத்த வருஷம் டிசம்பர் வரைக்கும் கிடையாது. ஏன்னா… எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு. அதையெல்லாம் முடிச்சுட்டுதான்’ என்றவரை மறுபடி மடக்கியது இன்னொரு கேள்வி. ‘உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்கன்னு கூட சொல்றாங்களே…?’ முகத்தில் எவ்வித டென்ஷனையும் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக பேச ஆரம்பித்தது அந்த பர்த் டே குழந்தை.

‘விட்டா எனக்கு குழந்தை இருக்குன்னு கூட சொல்வாங்க. அதுக்காக…?’ (ஓ… இது வேறயா?)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலைப்பா! மனசார வாழ்த்திய நமீதா

தான் கலந்து கொள்கிற எல்லா திறப்பு விழாக்களையும் ‘சிறப்பு’ விழாக்களாக்கிவிட்டு போவது நல்ல மனசுக்காரி நமீதாவின் வழக்கம்! வெறும் நடிகை என்பதோடு நின்று விடாமல் வர்த்தக துறையிலும்...

Close