பரவை முனியம்மாவுக்கு ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயிர……ம்! விஷால் செய்த பெரிய உதவி?

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு வேர்க்கும்போது ஒரு டச்சப் பாய் வந்து முகத்தில் கர்சீப்பால் ஒத்தி எடுக்கிறாரே? அவருடைய ரெண்டு நாள் பேட்டாவே ஐயாயிரம் இருக்கும். ஆனால் தமிழ்சினிமாவில் ஒரு சின்ன கே.பி.சுந்தராம்பாளாக குரல் பீய்ச்சிய பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவிய தொகை ஐயாயிரம். இதற்கு அவர் செய்யாமலே கூட இருந்திருக்கலாம் என்ற முணுமுணுப்பு சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.

பிறகென்னவாம்? கணவரை இழந்து, மருமகளை இழந்து, இரண்டு பேரக் குழந்தைகளுடனும், மூளை வளர்ச்சியற்ற மகனுடனும் நோய் வாய்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வரும் பரவை முனியம்மாவின் கண்ணீர் கதையை வர்ணித்திருந்தது குமுதம். அதை படித்தவர்கள் அத்தனை பேரும் பதறிப் போனார்கள். சினிமாவுலகத்தை சேர்ந்த ஒருவர் இப்படி நிற்கதியாக நிற்கும்போது அள்ளி அரவணைக்க வேண்டியது கோடி கோடியாக வாங்கும் ஹீரோக்கள்தானே ஒழிய வேறு யாருமில்லை. விஷால் காதுக்கு விஷயம் போனதும், உடனடியாக பரவை முனியம்மாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். மாதந்தோறும் ஐயாயிரம் தருவதாக வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

நடிகர்களின் வாக்குறுதி எந்தளவுக்கு ஸ்டிராங்கானது என்பதை கும்பகோணம் தீ விபத்து நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியாலும், அதற்கப்புறம் அவர்கள் கொடுத்த திருநெல்வேலி பொட்டலத்தாலும் நன்கு உணர்ந்திருக்கிறது ஊர் உலகம். இந்த லட்சணத்தில் விஷாலின் இந்த மாசா மாச… வாக்குறுதி எந்த மாதிரி அமையும் என்பதை சொல்லத் தேவையில்லை. ‘இவனுங்களுக்கு கொடுத்தாலும் குத்தம், கொடுக்காட்டாலும் குத்தம். சொல்ல வந்துட்டானுக…’ என்று ஒரு கூட்டம் நம் மீது கல்லெறிந்தாலும், இந்த ஐயாயிரம் விஷாலின் தகுதிக்கு அழகல்ல.

நல்லவேளையாக பரவை முனியம்மாவுக்கு உடனடியாக 25 ஆயிரம் வழங்கி கவலை போக்கியிருக்கிறார் சரத்குமார். ‘சிங்கம் போல எழுந்து வர்றான் எங்க பேராண்டி’ என்று பிரபல ஹீரோ விக்ரமின் தோளை கட்டிக் கொண்ட இந்த பாட்டி, ‘பாடி’யாகிற வரைக்கும் அப்படியொரு விஷயத்தையே காதில் போட்டுக் கொள்ள மாட்டார் போலிருக்கிறது விக்ரம்.

நல்லாயிருங்கப்பா… எல்லாரும்!

Read previous post:
பாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற! – புலி படத்திற்கு சிம்புதேவன் சப்பைக்கட்டு

அபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம்! பின்னால் வைத்திருந்த வினைல்...

Close