நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட வரணும்! முதல்வருக்கு அழைப்பு விடுத்த விஷால்!
ஏதோ கச்சத்தீவை மீட்க கிளம்பியது போல கிளம்பிய விஷால் அணி, அதற்காக போராடிய போராட்டங்களையும், முண்டா தட்டல்களையும் நாடு ஒரு ஆக்ஷன் படம் போல பார்த்து மகிழ்ந்து சில வாரங்களாச்சு. பதவிக்கு வந்ததிலிருந்தே “முதல்வர் அம்மாவுக்கு நன்றி சொல்லணும். அவங்களை நேர்ல மீட் பண்ணணும்” என்று துடி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள். அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில், இவர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்க, நேற்றுதான் முறைப்படி அழைக்கப்பட்டார்களாம் புதிய பொறுப்பாளர்களான விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர். இந்த ஐவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது முதல்வர் அலுவலகம்.
இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்தது மேற்படி குழு.
மிக சுருக்கமாகவும் சீக்கிரமாகவும் நடந்து முடிந்தது சந்திப்பு. தங்களை மிக மிக மகிழ்ச்சியாக முதல்வர் வரவேற்றதாக குறிப்பிட்டார் நாசர். மேஜர் சுந்தர்ராஜன் இருந்தபோது சங்கம் எவ்விதம் செயல்பட்டது என்பது பற்றியெல்லாம் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம் முதல்வர். “நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு நீங்கள் வரவேண்டும்” என்று விஷால் கேட்டுக்கொள்ள, “அழைப்பு அனுப்புங்க. கண்டிப்பா வர்றேன்” என்று கூறி வாழ்த்தி அனுப்பினாராம் முதல்வர்.