எட்டு நாளுக்குள் சம்பளம்! கண்டிஷன் போட்ட விஷால்?
விஷால் பற்றிய இன்றைய தகவலே வேற… சண்டைக்கோழி 2 ஐ டிராப் பண்ணிவிட்டார். லிங்குசாமி கஷ்ட திசையிலிருக்கும் இந்த நேரத்தில் அவரது ஒரே பில்டப் படமாக இருந்தது இப்போதைக்கு சண்டக்கோழி 2 தான். ஆனால் இருவருக்கும் இடையே என்ன கோளாறோ? இன்று ட்விட்டரில் இந்த படம் முடங்கியது பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டு திருப்பதி பிரதர்ஸ் ஏரியாவை திகைக்க வைத்திருக்கிறார் விஷால். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் இதுதான்.
“சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. ‘சண்டக்கோழி 2’ கைவிடப்படுகிறது”
இது குறித்த அடுத்தடுத்த அபிப்ராயங்கள், அல்லது மோதல்கள், அல்லது விளக்கங்கள் இன்னும் இரண்டொரு நாளில் வரக்கூடும். இந்த நேரத்தில் இன்னொரு தகவல்.
இது நடிகர் சங்கத்தின் நலன் சார்ந்தது. வேறொன்றுமில்லை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் விஷால். அவர் மட்டுமல்ல, சங்க பொறுப்பாளர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதம் அது. அதில் நடிகர் நடிகைகளுக்கு தரவேண்டிய சம்பளத்தில் பாக்கி வைத்திருந்தால், அதை படம் வெளியான எட்டு நாட்களுக்குள் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. சொந்தப்படங்கள் எடுத்து ஒரு தயாரிப்பாளராக ஆங்காங்கே டப்பா நசுங்கிப் போயிருக்கும் விஷால், இப்படியொரு வேண்டுகோளை வைத்திருப்பது சங்கத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
நல்ல வேண்டுகோள்தான். ஆனால் நடக்குற விஷயமா அது?