வெற்றி வெற்றி ! கட்டிடமும், கல்யாணமும்! விஷாலின் அடுத்த திட்டம்!

கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றிருக்கிறார்கள் அவர்கள்.

“நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிட்டுதான் என் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன்” என திரவுபதி சபதம் போட்ட விஷாலை கிண்டல் செய்யாத ஆளேயில்லை. “ஏம்பா… கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில்லையா?” என்கிற அளவுக்கு சரத் அணியின் ‘பவர்’ மீது நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். அப்படியாப்பட்ட பவரையே லேசாக ஷேக் பண்ணி கூண்டோடு வெற்றி பெற்றிருக்கிறது விஷால் அணி.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகிய அத்தனை பேரும் கூண்டோடு வெற்றி பெற்றிருப்பது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம்தான். செயற்குழுவுக்கு போட்டியிட்டவர்களில் நான்கு பேர் மட்டும் சரத் அணியிலிருந்து வந்திருக்கிறார்கள். நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன், ராம்கி ஆகிய அவர்களும் பிரச்சனையில்லாதவர்கள் என்பதால், நினைத்ததை நிறைவேற்றுவதில் சங்கடம் வரப்போவதில்லை.

“விஷாலின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் அவருடன் மல்லுக்கு நின்ற ராதாரவி. “எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்போம்” என்று கூறியிருக்கிறார் நாசரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார். இதைவிட ஆரோக்கியமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்? இவ்வளவுக்கு பிறகும் கூட, “நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நான் கொண்டு வந்த திட்டம் மிக சிறப்பானது. அதையே செயல்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்று சரத் கூறியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எங்களது முதல் குறிக்கோள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற கலைஞர்களின் டேட்டாபேஸ் கலெக்ட் பண்ணுவதுதான். அவர்களுக்கு என்ன வயசு? அவர்களுக்கு என்ன தேவை? இதையெல்லாம் முதலில் கவனிப்போம் என்று கூறியிருக்கிறார் கார்த்தி. நிறைய திட்டம் வச்சுருக்கோம். நடிகர் சங்கத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு போவாம் என்று சூளுரைத்திருக்கிறார்கள் அத்தனை பேரும்.

எல்லாருடைய எண்ணங்களும் நிறைவறே வாழ்த்துவோம்!

மொத்த ஓட்டுகள் – 3,139
நேரில் பதிவான ஓட்டுகள்- 1,824
தபால் ஓட்டுகள்- 821
மொத்தம் பதிவான ஓட்டுகள்- 2,607

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1,231 வாக்குகள் பெற்றார். 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றி பெற்று உள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட சிவசாமிக்கு 4 வாக்குகள் கிடைத்தன.

விஷால் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு 1,445 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார். ராதாரவியை விட விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.

துணைத்தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து சரத்குமார் அணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் 1,080 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.ஆர்.கண்ணனை விட கார்த்தி 413 வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறார்.

1 Comment
  1. ARUN says

    ALL THE BEST VISHAAL & TEAM.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா ஆப்சென்ட்! ஆனாலும் வந்து சேர்ந்ததாம் ஓட்டு?

இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி... நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம்...

Close