என்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா? வரலட்சுமி ஷாக்?
இன்னும் சில தினங்களில் திரைக்கு வந்துவிடும் தாரை தப்பட்டை! பாலா படம் என்றாலே வியப்பும் திகைப்புமாக வேறு வேறு அனுபவங்கள் கிடைக்கும் ரசிகனுக்கு! அதைவிட பெரிய அனுபவம் கிடைத்திருக்கும் அப்படத்தில் நடித்தவர்களுக்கு! அடிப்பார்… மிரட்டுவார்… விஜயகாந்த் போல சமயங்களில் தூவென துப்பினாலும் துப்புவார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் தலைகீழாக ஒப்பிக்கிறது சசிகுமார், வரலட்சுமி ஜோடி.
“ஷுட்டிங் ஸ்பாட்ல அடிப்பாரான்னு கேட்கிறீங்க. ஒரு நாளும் அப்படி நடந்தது கிடையாது. அவ்வளவு ஜாலியா இருந்தோம். எங்க போக்குல விட்டு நடிப்பை வரவழைச்சார் பாலா சார். ‘வரலையா? இன்னும் நல்லா பிராக்டீஸ் எடுத்துக்கோ’ என்று டைம் கொடுப்பார். வெளியில்தான் அவரை பற்றி தப்பு தப்பா பேசுறாங்க. நிஜத்தில் அப்படி ஒரு நாளும் நடந்து கொண்டதில்ல” என்றார்கள் இருவருமே. (ஓ….!)
இதே சசிகுமார் ஒரு காலத்தில் பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். இன்று ஹீரோவாக மாறி அவர் படத்திலேயே நடிக்கப் போனால், நினைப்பெல்லாம் பழைய மாதிரிதானே இருக்கும்? எப்படியிருந்துச்சு மனநிலை? இந்த கேள்விக்கு மறுபடியும் உருகி ஐஸ்கிரீமாக வழிகிறார் சசி. அப்ப மட்டுமில்லண்ணே… எப்பவும் நான் பாலா சார் அசிஸ்டென்ட்தான். என் வீட்டுல நான் எப்படியிருப்பேனோ அப்படிதான் அங்கும் இருந்தேன். யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை என்றார் சத்திய சத்தியமாக!
பக்கத்தில் வெண்ணையை திரட்டி வைத்த மாதிரியிருந்த வரலட்சுமியிடம் கேள்வி கேட்காமல் இடத்தை விட்டு நகர்ந்தால், வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் மனசு உள்ளங்கால் ரேகை பதிகிற அளவுக்கு உதைக்குமே? கேட்டேவிட்டோம் அந்த கேள்வியை. இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு விஷால்தான் வாய்ப்பு வாங்கித் தந்தாராமே? அவ்வளவுதான்… பொங்கிவிட்டது வெண்ணை.
யார்ங்க சொன்னா? நிஜமா இந்த வாய்ப்பு கிடைச்சது சங்கீதா ஆன்ட்டியால. அவங்ககிட்ட பாலா சார் சொன்னாராம். இது டான்ஸ் சப்ஜெக்ட். ஏற்கனவே வரலட்சுமி ஒரு டான்சரா இருக்கறதால அவங்ககிட்ட கேட்கலாம்னு. சங்கீதா சொன்னதும் நான் போய் பாலா சாரை பார்த்தேன். அதற்கப்புறமும் ஒரு மாசம் இந்த படத்துக்காக டான்ஸ் பயிற்சி எடுத்துகிட்டேன். அதற்கப்புறம் கிடைச்சதுதான் ‘தாரை தப்பட்டை’ என்றார்.
வரலட்சுமி தமிழில் நடித்து வரப்போகிற இரண்டாவது படம்தான் இது. “என் பட வரிசைய இதுலேர்ந்து கணக்கு வச்சுக்கோங்க” என்று வரலட்சுமி சொன்னதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது மக்களே…