உதவிப்பொருட்களை இந்த முகவரிக்கு அனுப்புங்க… விஷால், கார்த்தி வேண்டுகோள்
சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் மக்கள் அவதியுறும் நேரத்தில் மிக வேகமாக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இணையாக நடிகர் சங்கமும் தன் சேவையை முடுக்கிவிட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், தங்களின் சார்பாக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அது இதுதான்-
வெள்ள நிவாரண நிதிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும் பல்வேறு நிவாரண பொருட்கள் வந்து கொண்டு இருக்கிறது. வடசென்னை , கடலூர் , முடிச்சூர் ஆகியவை தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. உங்களால் முடிந்த உதவியை இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது அதிகம் தேவைப்படும் பொருட்களான பால் பவுடர் , சானீட்டேரி நாப்கின் , குடிநீர் , போர்வைதான். இவற்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவலாம். உணவு பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு தேவையான அளவிற்கு தற்போது கிடைத்து வருகிறது. நடிகர் மற்றும் குறிப்பிட்டவர்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இல்லை.இப்போது உதவி வரும் மக்கள் மற்றும் இளைஞர்கள் போல் மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து நிச்சயம் உதவ வேண்டும்.
நாங்கள் லேடி ஆண்டாள் பள்ளியை மையப் பகுதியாக கொண்டு இயங்கி வருகிறோம். எல்லா பொருட்களும் இங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கு செல்கிறது . அதனால் நீங்கள் அனுப்பும் பொருட்களை லேடி ஆண்டாள் பள்ளிக்கு தாங்கள் அனுப்பி வைக்காலம். நாங்கள் “ரெஸ்க்யு சென்னை” என்ற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம். எங்களை அதிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே அனைவரும் உடனே முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் விஷால்.
நடிகர் விஷால் , கார்த்தி, ஜே.கே.ரித்தீஷ், கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் பல நடிகர் நடிகைகள் இன்று மாலை கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.