பொறுப்புக்கு வந்துட்டா பருப்பு விலைக்கு கூட பதில் சொல்லி ஆகணும்! விஷால் அணியின் சங்கடமும் சமாளிப்சும்!
நடிகர் சங்கத் தேர்தல் நல்லபடியா முடிஞ்சுது. சங்கத்து கல்வெட்டை படிச்சோமா, சட்டு சட்டுன்னு பிரச்சனையை முடிச்சோமா என்று போக விடுகிறதா அரசியல்? நாடாளும் முதல்வரின் ஆசியில்லாமல், வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன் பாக்சை கூட நிம்மதியாக பிரிக்க முடியாது என்பது தெரியாதா விஷால் அணிக்கு? அந்த ஒரு காரணத்திற்காகவே அரும்பாடு பட்டு அம்மாவை சந்தித்துவிட்டார்கள். ஒரு புறம் வெள்ள சேதம். அதிகாரிகளுடன் ஆலோசனை என்று கடும் பணி நெருக்கடியில் இருந்தாலும், இவர்களை வரச்சொல்லி, ஒரு போட்டோ எடுத்துவிட்டு ஐந்தே நிமிடத்தில் அனுப்பியும் வைத்துவிட்டார் முதல்வர் ஜெ.
நடிகர் சங்கத் தேர்தலில் எப்போது சரத்குமாருக்கு எதிராக முண்டா தட்டினாரோ, அப்போதிலிருந்தே “ அந்த விஷால் தம்பியவும் அவரு கூட களமாடும் உடன் பிறப்புகளையும் வரச்சொல்லுப்பா. ஒரு வாழ்த்தை சொல்லிடுவோம்” என்று திமுக தலைவர் கலைஞர் தூதுவிட, மனசுல கட்டி வச்சிருக்கும் நடிகர் சங்க கட்டத்தை இவரு ஒத்தை ஆளா நின்னு உடைச்சுருவாரு போலிருக்கே என்று அதிர்ந்த விஷால் அணி, செய்தித்தாளில் கலைஞர் படம் இருந்தால் கூட, கையெடுத்து கும்பிட்டு கடைசி பக்கத்திற்கு ஓடுகிற அளவுக்கு ஆனது நிலைமை. தேர்தல் முடியும் வரை கருப்பு கலரோ, சிவப்பு கலரோ சட்டை கூட போடாமலிருந்தார் விஷால்.
அம்மாவை சந்தித்துவிட்டு வந்த பின்பும் கூட, ஐயாவை சந்திக்கலையா நீங்க? என்றொரு கேள்வி விஷால் அண்டு நாசர் அணியை துரத்திக் கொண்டேயிருந்ததாம். அதுவும் இப்படியொரு போட்டிக்கும் தேர்தலுக்கும் காரணமான பூச்சி முருகன் திமுக பிரமுகராச்சே? அவரது அழைப்பை தாங்க மாட்டாமல் கலைஞரை சந்திக்கக் கிளம்பினார்கள் நடிகர் சங்க பொறுப்பாளர்கள். இந்த சந்திப்பில் நிறைய பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தாராம் கலைஞர்.
இவர்கள் போய் கலைஞரை பார்த்தால் அது அம்மாவுக்கு பிடிக்காதே? எப்படி சமாளிப்பது? அவரும் ஒரு கலைஞர் என்று சொல்லி சமாளிப்பதா? அல்லது அவரும் சினிமாவில் ஒரு சாதனையாளர்தானே என்று சொல்வதா? பலவாறு குழம்பிப் போன விஷால் அணி, சாமர்த்தியமாக ஒரு காரியத்தை பண்ணியிருக்கிறது. கலைஞரை சந்தித்துவிட்டு அப்படியே கிளம்பி படுத்த படுக்கையாக இருக்கும் பத்திரிகையாளரும் நடிகரும் பழுத்த அரசியல்வாதியுமான சோவிடம் ஆசி பெற்றார்கள். அதற்கப்புறம் அங்கிருந்து கிளம்பி தேமுதிக தலைவரும் முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்தை சந்தித்தார்கள்.
ஒருவழியா எல்லாரையும் சந்தித்து பேலன்ஸ் பண்ணியாச்சு. இந்த சந்திப்புகளில் மறந்தும் கூட அரசியல் பேசாமல் தப்பித்துக் கொண்ட இவர்களின் சாமர்த்தியத்தை பார்த்தால், நடிகர் சங்க கட்டிடத்தை சீக்கிரம் கட்டியே முடிச்சுருவாங்க போலிருக்கே?
well done vishal