சூரி மாறிட்டாரு…! விட்டா வெளையாடுவாரு?

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜீவா’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்! ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்க, படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ‘பீறிட்டோடும் ஃபிரண்ட்ஷிப்’ என்று தனிக்கட்டுரையே எழுதுகிற அளவுக்கு தோளோடு தோள் போட்டு வந்திருந்தார்கள் விஷாலும் ஆர்யாவும். பின்னால் நின்ற பேனரில் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் லோகோவும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி லோகோவும் பளிச்சிட்டது. ஆனால் தனது பேச்சில் விஷாலை ‘தேர்ட் பர்சன் சிங்குலராக’வே பேசிக் கொண்டிருந்தார் ஆர்யா.

மற்றவங்க மாதிரி வெறும் பேரை மட்டும் போட்டுகிட்டு இந்த படத்தை ரிலீஸ் பண்ணல விஷால். அவரே சொந்தமா பணம் கொடுத்து வாங்கி வெளியிடுறார் என்றார். (அப்ப உங்க ரோல் என்ன தலைவா?) நல்லவேளையாக அதற்கப்புறம் அவர் பேசிய தொடர்ச்சியில் அது புரிந்தது. ‘ஆடிட்டர் ஷண்முகமும், மகேந்திரனும் என்கிட்ட இந்த படத்தை வாங்கணும்னு சொன்னாங்க. நான் சரின்னு சொல்லிட்டேன். படத்தையும் பார்க்கல. கதையையும் கேட்கல. ஆனால், விஷால்தான் முழு கதையையும் கேட்டார். நல்லாயிருக்குன்னு எங்கிட்ட சொன்னார்’ என்றார் கூடுதல் தகவலாக.

‘பொதுவா சுசீந்திரன் படம்னா அதுல ஒரு நேரத்தி இருக்கும். நடுவுல ஒரு படம் மட்டும்தான்… சரி அதை விடுங்க (சிரிக்கிறார்) இந்த படமும் சுசீந்திரன் ஸ்டைல் படமாகவே இருக்கும். ஹீரோவாக நடிக்கிற விஷ்ணு என் தம்பி மாதிரி. அவனுக்காக நான் எதையாவது செய்ணும்னு நினைச்சேன். அதனால்தான் இந்த படத்தை வாங்கி வெளியிட்டேன்’ என்றார் விஷால். நடுத்தர குடும்பத்து இளைஞன் கிரிக்கெட் மீது வைத்திருக்கிற ஆசையும் நம்பிக்கையும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற லட்சியமும் படத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதுதான் கதை(யாக இருக்கும் போலிருக்கிறது) ட்ரெயல்ரை பார்த்தால் அப்படிதான் தோன்றியது. ‘நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு இல்லாமலே தோத்துப் போறோம்’ என்கிற மாதிரி வலிமையான டயலாக்குகளால் கிரிக்கெட் வாரியத்தின் சட்டை காலரை பிடித்திருந்தார் சுசீந்திரன்.

ட்ரெய்லரில் ஒரு ஆச்சர்யம். மிக சுத்தமாக இருந்தார் சூரி. அவரையும் ஒரு கிரிக்கெட்டராக்கியிருந்தார்கள். படத்தின் ஹீரோவான விஷ்ணு அந்த சுவாரஸ்யத்தை அவிழ்த்தார். ‘சூரி இந்த படத்தில் கிரிக்கெட் ஆடியிருக்கார். இதுக்காக பத்து நாளு அவருக்கு ட்ரெய்னிங் கொடுத்தோம். யூனிபார்ஃம் போட்டுகிட்டு ஜம்முன்னு வந்து நின்னார். விட்டால் அடுத்த முறை எங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடுற அளவுக்கு தேறிட்டார்’ என்றார் விஷ்ணு.

படத்தின் ஹீரோயினான ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால், பிரஸ்மீட்டில் ஆப்சென்ட்.

இசை- டி.இமான். சரக்கு சுச்சுவேஷன் பாடல் ஒன்றில் நம்ம ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் ஆடியிருந்தார். ஒரு படம் வெளிவந்து பரபரவென வெற்றி மிதப்பில் அவரை ஏற்றியிருக்கிறது. ஆனால் இந்த நேரத்திலும் கூட அதை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் ஒரு பாடலுக்கு அவர் ஆட சம்மதித்திருப்பதே இந்த படத்தின் ஆகப்பெரிய பிள்ளையார் சுழி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குரங்கு வேற… குரோட்டன்ஸ் வேற… வௌங்குவீங்களா நீங்கள்லாம்?

‘குரங்குக்கும் குரோட்டன்சுக்கும் வித்தியாசம் இல்லையா? விளங்குவீங்களா நீங்கள்லாம்...’ என்று அகில உலக ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதற கதற மண் சோறு சாப்பிட வேண்டிய...

Close