பாம்புக்கும் தேனாண்டாளுக்கும் பல வருஷ நட்பு! லிங்குசாமி கலகல…
‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குறோம்’னு சொன்னாலும் சொன்னார்… லிங்குசாமியை இறக்கு இறக்கென்று இறக்கிவிட்டார்கள் வலைதள வம்பாளர்கள். எப்படியோ அஞ்சானில் சறுக்கி, ரஜினி முருகனில் தப்பிய அவர், பல மாதங்களாகவே கோடம்பாக்கம் நிகழ்ச்சிகள் எதிலும் முகம் காட்டாமலிருந்தார். அந்த விரதத்தை ஒரு கிராபிக்ஸ் பாம்பு உடைத்துத் தள்ளியது. யெஸ்… சிவநாகம் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அபூர்வமாக தென்பட்டார் லிங்கு.
‘ரஜினி முருகன்’ படம் வெளிவர பெரிதும் உறுதுணையாக இருந்த பென் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஷாஜித்தின் படம் இது என்பதால்தான் நேரில் வந்து வாழ்த்தினார் லிங்கு. இல்லையென்றால் அவர் ஏன் வரப்போகிறார் அங்கு? இருந்தாலும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்த்தது லிங்குவின் பேச்சு.
இந்த படத்தின் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா இதுவரைக்கும் 138 படங்கள் இயக்கியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்? பாலசந்தர் 100 படங்கள் இயக்கியிருக்கிறார். ராம.நாராயணன் 100 படங்கள் இயக்கியிருக்கிறார். கோடி ராமகிருஷ்ணா இன்னும் அதே உற்சாகத்துடன் படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் கூட என்னிடம், “நல்ல கதை இருந்தா கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். இந்த சிவநாகம் படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடி என்றார்கள். பெரிய விலை கொடுத்து இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிடுறாங்க. பொதுவாகவே தேனாண்டாள் பிலிம்ஸ்சுக்கும் பாம்புக்கும் பல வருஷமா ஹிட் சென்ட்டிமென்ட் இருக்கு. இந்த படத்தின் ரிசல்ட்டை இப்பவே நம்மாள கணிக்க முடியுது என்றார் லிங்கு.
அருந்ததி, அம்மன், இதுதாண்டா போலீஸ், பாரத் பந்த் மாதிரி பிரமாண்ட வெற்றிப்படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா, தான் இயக்கிய இந்த சிவநாகம் பற்றி பேசும்போது மனுஷன் இன்னமும் அதே ஸ்பிரிட்டோடு இருக்கிறாரே என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். பொதுவாக என்னுடைய படங்களில் கிராபிக்சுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை ரொம்ப பர்பெக்டா பண்ணணும்னு நினைப்பேன். இந்த படத்தை துவங்கும்போது சின்ன பட்ஜெட்டில்தான் ஆரம்பித்தோம். கிளைமாக்ஸ் வித்தியாசமா இருக்கணும். அதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் செலவு பண்ணலாம் என்று பென் மூவிஸ் தயாரிப்பாளர் ஷாஜித் சொன்னப்போ, அதை எப்படி உருவாக்கலாம்னு யோசிச்சோம். அப்பதான் அவரே ஒரு ஐடியா கொடுத்தார்.
கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்னும் அப்படியே இருக்கு. அவரை மீண்டும் இந்த படத்தில் நடிக்க வைத்தாலென்ன? என்றார். மறைந்த ஒருவரை கிராபிக்ஸ் மூலம் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல. நான் தயங்கிய போது ஷாஜித் எனக்கு தைரியம் கொடுத்தார். திரையில் விஷ்ணுவர்த்தனை பார்க்கும் போது எனக்கே சிலிர்த்துப் போய்விட்டது என்றார்.
ஆடி மாசம் வந்தால் அம்மனுக்கு கொண்டாட்டம். இந்த ‘சிவநாகம்’ வந்தால், பக்தர்களுக்கு கொண்டாட்டம்!