விஸ்வாசம் / விமர்சனம்

கட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம்! எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே? என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும்! விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்!

தலைக்கு வகிடெடுத்தாலும் அரிவாளால்தான் எடுப்பார்கள் போலிருக்கிறது. அப்படியொரு வில்லேஜ். அங்குதான் தூக்கு துரையாக தொடை தட்டுகிறார் அஜீத். ‘உங்களுக்கு தேவை முகம்தானே… பார்த்துக்கோங்க…. ரசிச்சுக்கோங்க…. வேணும்னா மூணு வேளையும் அர்ச்சனை கூட பண்ணிக்கோங்க. அதை தாண்டி மேக்கப் பற்றியெல்லாம் நோ அலட்டல்’ என்கிற தத்துவத்துடன் அறிமுகம் ஆகிறார் அஜீத்.

முதல் பாதி முழுக்க அஜீத்தை அணுஅணுவாக ரசிக்கும் அவரது ரசிகர்களுக்காக என்பதால், மருந்துக்கு கூட மெனக்கெடவில்லை இயக்குனர் சிவா. ஒவ்வொரு கமர்ஷியல் சினிமாக்களிலும் துவைத்துப் பிழியப் பட்ட அதே டெம்ளெட்டுகளால் நகர்கிறது படம். அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்புக்காக வரும் நயன்தாராவுக்கு நேர்கிற சிலபல இன்னல்களை சொடக்கு போடுகிற நேரத்தில் விரட்டியடிக்கிறார் அஜீத். அவ்ளோ படிச்ச டாக்டர், ஒரு படிக்காத மேதையை கட்டிக்கொள்ள விரும்புகிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிறைவேற… ஒரு சின்ன சோகத்துடன் கதை மும்பைக்கு ஷிப்ட் ஆகிறது. அப்புறம்தான், இந்த கதை இப்படியே போனால் விவேகத்தின் பெருமைக்கு(?) இடைஞ்சலாகிவிடும் என்று உணர்கிறார் சிவா. செகன்ட் ஆஃப் முழுக்க உணர்ச்சிக்குவியல். ஒரு அப்பனின் ஸ்தானத்தில் நின்று அடித்து விளையாடியிருக்கிறார் அஜீத்!

குறிப்பாக மகள் அனிகாவுக்கு நேர்கிற பிரச்சனையை நொடியில் புரிந்து கொள்கிற அஜீத், ஒரு அரணாக நிற்கும் அழகும் அந்த கம்பீரமும் கைதட்டல் மழையை கொட்டுகிறது தியேட்டரில். ஃபைட் காட்சிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தையும் தருகிறது அஜீத்தின் மின்னல் தெறிப்பு. ‘அப்பா…’ என்று மகள் அனிகா அழைக்கும்போது ‘என் சாமீ’ என்று அஜீத் நெக்குருகி கரைகிற காட்சியில் கண்கலங்காத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

முன் பாதியில் கூத்தாடித் தீர்க்க ஆயிரம் சந்தர்பங்கள் இருந்தும் நயன் அஜீத் லவ்வை டீசன்ட்டாக நகர்த்திய சிவாவுக்கும், அந்த கேரக்டரில் அடக்க ஒடுக்கமாக நடித்த நயனுக்கும் கோடி நமஸ்காரம். வழக்கம் போல மெச்சூரிடி நடிப்பால் பிரமாதப்படுத்துகிறார் நயன்தாரா. அதுவும் தன் மகளுக்கு முன் இவர்தான் அப்பா என்பது தெரியாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த கண்கள், நயனின் விசேஷ படைப்புகளில் ஒன்று!

இவ்விருவருக்கும் இணையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் அனிகா. அந்த விஸ்தாரமான கிரவுண்டில் நிஜமாகவே ஓடிக் களைக்கிறாள் குழந்தை. உணர்ச்சி பீறிட வைக்கும் கதைக்கு பொருத்தமான முகம். நடிப்பு. வாழ்த்துக்கள்மா…!

மும்பையின் முக்கிய தொழிலதிபர் இவ்வளவு முட்டாளாகவா இருப்பார் என்று நினைக்க வைக்கிறது ஜகபதிபாபுவுன் பாத்திரப்படைப்பு. பட்… வில்லன் என்றாலே சகல அழுக்கையும் சுமந்து, சகல பழியை சுமக்கிற ஆள்தானே? ஆஹா… என்று கொண்டாட வைக்காவிட்டாலும், அட சீ என்று கடுப்பாக விடவில்லை பாபு.

தம்பி ராமய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர் என்று யார் யாரோ இருக்கிறார்கள். சிரிப்புதான் சில்லரையை கொட்டவில்லை.

டி.இமானின் இசையில் கண்ணான கண்ணே இந்த வருடத்தின் இனிய மெலடிகளில் ஒன்று. பிற பாடல்களும் தேன்.

வெற்றியின் ஒளிப்பதிவு மெல்ல கை பிடித்து கதைக்குள் இழுத்துக் கொள்கிறது ரசிகனை. மழை… ஃபைட்… தேனியின் டாப் ஆங்கிள் காட்சி என்று நம்ப வைக்கிறார் அனைத்தையும்.

பழகிய குதிரையாச்சே என்று சவாரி பண்ணுகிறார் அஜீத். முதுகிலிருப்பது ராஜா என்பதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது குதிரை. இருந்தாலும் இந்த ஓட்டத்தை இன்னும் நாலு முறை கூட ரசிக்க தயாராக இருக்கிறது நாடு. ஏனென்றால் அஜீத் ரசிகனின் ‘ராஜ விஸ்வாசம்’ அப்படி!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
 1. Joseph says

  இன்று முதல் தமிழகமெங்கும் 270 தியேட்டர்களில் 1000 காட்சிகளுக்கு மேல் தூக்கி வீசப்படுகின்றது பொங்கல் இல்லைன்னா எப்பவோ பலியாகியிருக்கவேண்டிய கருப்பு ஆடு அஜித் பொங்கல் முடிந்தவுடன் தியேட்டர்களில் நரபலி கொடுக்கப்பட்டது
  தலைவரை எப்படியாச்சம் வீழ்த்தனும்னு எவ்ளோ வன்மமோட அலயுறாங்க…. 68 வயசுல ஒத்த ஆள எல்லாரையும் தோக்க அடிச்சுட்டு அவ்ளோ பெரிய உச்சில இருக்காரு… இது தான் உண்மையான #ஒத்தைக்கு_ஒத்த_வாடா …
  நடக்கிறதெல்லாம் பாத்தா தலைவரின் அரசியல் வருகை எவ்வளவு பேருக்கு பயத்தை உண்டுபண்ணியிருக்குன்னு தெரியுது.. எவ்வளவு பாத்தாச்சு, இதை சமாளிக்கமாட்டாறா??
  அது எப்புடி திமிங்கலம் தமிழ்நாட்டுல: 700 தேட்டர் ல ஓடுற பேட்ட 100cr …
  400 தேட்டர் ல ஓடுற துளசி 125 cr [ 400 ல பாதி காத்து வாங்குது ] காதுகுள்ள குச்சி விட்டா பரவா இல்ல இவனுங்க ராக்கெட் டவா உடுறது மாட்டிக்க மாட்டோம்…..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேட்ட / விமர்சனம்

Close