வித்தையடி நானுனக்கு விமர்சனம்
தியேட்டரில் ரெண்டே பேர் சகித்துக் கொண்டு படம் பார்க்கிற மாதிரியெல்லாம் சினிமாவை கெட்ட சூழ்நிலை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், திரையிலேயே ரெண்டு பேர் மட்டும் வருவது மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ராமநாதன் KB. திரும்ப திரும்ப ஒரே மூஞ்ச பார்க்கணுமா என்று அலுத்துக் கொள்கிற நேரத்திலெல்லாம் ‘அப்படியெல்லாம் நினைக்க விட்ருவோமா?’ என்று ட்விஸ்ட் அடித்து, இந்த சாதா படத்தை ஆஹா படமாக்கிவிட்டார் இவர். படத்தில் நடித்த இருவருரில் ஒருவர் இந்த ராமநாதன் KB என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.
கிட்டதட்ட இரண்டு மணி நேரப் படத்தில் சிரித்து, அழுது, கலங்கி, தவித்து, பொங்கி பிரவாகம் எடுத்து ஓடியிருக்கிறார் ஒரு பெண். பெயர் சவுரா சையத்! நடிப்பு ? ஹவுரா மெயில்தான் போங்க…!
கதை? பிரபல நடிகை ஒருவரின் மகள்தான் இந்த சவுரா. மகளையும் தன்னை போலவே பெரிய நடிகையாக்கிப் பார்க்க வேண்டுVம் என்பது அம்மா கணக்கு. ஆனால் “எனக்குதான் நடிப்பே வரலியே, ஏன் வற்புறுத்துற? ரொம்ப டென்ஷன் பண்ணுனா நான் சூசைட் பண்ணிப்பேன்” என்று மிரட்டும் மகள் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, அர்த்தராத்திரியில் ஒரு அத்துவான காட்டில் கார் பிரேக்டவுன். பெட்ரோல் இல்லை என்பது பிறகுதான் தெரிகிறது. அதற்கப்புறம் அதே வழியாக வேறொரு கார் வர, லிப்ட் கேட்டு ஏறும் வருங்கால நடிகைக்கு வந்த பிரச்சனை என்ன? அதுதான் படத்தின் பெரும்பாலான காட்சிகள்.
சவுரா சையத் புதுமுகம் என்கிறார்கள். நமக்கென்னவோ அப்படி தெரியவேயில்லை. அப்படியே தத்ரூபமாக இருக்கிறது நடிப்பு. நாம் சிக்கிக் கொண்டது ஆபத்தான ஒருவனிடம் இல்லை என்பதை தெரிந்து கொண்டபின் அவர் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம், மாதர் சங்கங்கள் பாத்தி கட்டி படுத்தி எடுக்கவேண்டிய ஏரியா. லேசாக தண்ணியடித்துவிட்டு புல் மப்புடன் “கிஸ் மீ யா” என்று அந்த கிழவனிடம் கெஞ்சுகையில், தியேட்டர் சைலண்ட் ஆகிறது. அப்புறம்… ? அப்புறம்தான் ஆரம்பிக்கிறது ஐயோ குய்யோ. தப்பித்தால் போதும் என சவுரா தவிப்பதும், ‘விட்டால்தானே போவே. விடுவேனா பார்’ என்று அந்த லிப்ட் ஆசாமி மிரட்டுவதும்தான் படம்.
கையில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு சுளீர் சுளீரென தாக்கும் அந்த நபர், ஒரு கட்டத்தில் கைவிலங்கை கொண்டு ஹீரோயினை லாக் பண்ணியும் வைக்கிறார். சும்மா சொல்லக் கூடாது. இந்த டார்ச்சர் அத்தனையையும் லைவ்வாக தாங்கி, அந்த வலியை முகத்தில் கொண்டு வந்திருக்கிறார் சவுரா. என்ன ஒன்று? வாயை திறந்தால் மூடினால் கூட இங்கிலீஷ்தான் வழிகிறது. அதுவும் ஸ்டைலிஷான இங்கிலீஷ் என்பதால், பாமர ஏரியா பம்ளிமாஸ் ஆகக்கூடும்.
இப்படி இரண்டு பேர் மட்டுமே வந்தாலும், கதை சொல்லும் விதத்தில் குரல்களை கொண்டு செப்பனிடுகிறார் டைரக்டர். நாய் குரைப்பதும், அந்த வீட்டுக்கு வெளியே வேறொரு கார் வந்து நிற்பதும், போனில் யாரோ பேசுவதுமாக கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறது மற்ற மற்ற என்ட்ரிகள்.
அவ்வளவு சித்திரவதையும் எதற்காக என்று ஆடியன்ஸ் தெரிந்து கொள்கிறபோது, அதுவரை ஒரு டோனில் இருந்த கேமிரா பதிவு மெல்ல கலருக்கு மாறுகிறது. அட… கலர்புல்லா வரணும்னா, பேட் அவுட் ஆகுற அளவுக்கு அடி வாங்கணும் போலிருக்கே என்கிற மெசேஜூம் அதன் பின்னே தொக்கி நிற்கிறது.
இந்த கதையை சவுராவின் நடிப்பு தாங்குவது ஒருபுறம் என்றால், படத்தில் வைக்கப்பட்ட கேமிரா கோணங்களும் பின்னணி இசையும் கூட பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. முறையே கேமிராமேன் ராஜேஷ் கடம்கோட்டுக்கும், இசையமைப்பாளர் விவேக் நாராயணனுக்கும் பெருமைகள் போய் சேரட்டும்.
மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘ பாடலுக்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளார் விவேக் நாராயண். கேட்க கேட்க இனிமை.
வித்தியாசமான முயற்சிகள் சில நேரங்களில் பொறுமையை சோதிப்பது சகஜம்தான். ஆனாலும் இது பாதிப்பில்லாத சோதிப்பு!
வித்தையடி நானுக்கு – விந்தையடி தமிழ்சினிமாவுக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன்
thanx for the rev iew