இழக்க முடியாத பேரிழப்பு மறைந்தார் விவேக்கின் மகன் பிரசன்னா
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் மகன் பிரசன்னகுமார் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 40 நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிரசன்னகுமார், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இசை மீது பிரசன்னகுமார் அதிக நாட்டம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு நந்தினி, தேஜஸ்வினி என்ற சகோதரிகள் உள்ளனர்.
சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள விவேக் வீட்டில் பிரசன்னகுமாரின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடக்கின்றன. விருகம்பாக்கம் இளங்கோ நகர் மின்மயானத்தில் நாளை மாலை 4 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் விவேக்குக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகமுமே பெருத்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளது. பொதுமக்களும் இந்த பிஞ்சுக்கா இந்த நிலைமை? என்று ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே விவேக் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ‘‘தீவிர காய்ச்சலின் பாதிப்புக்கு மகனைப் பறிகொடுத்துவிட்டு, நானும் குடும்பத்தினரும் வேதனையில் இருக்கிறோம். எனவே, செய்தியாளர்கள், தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள் செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்கவோ என் வீட்டுக்கு வருவதை அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
நாடெங்கிலும் கோடிக்கணக்கான மரங்களை நடுவதற்காக தன் தொழிலை கூட தள்ளி வைத்துவிட்டு பம்பரமாய் சுழன்ற நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிழப்பை யாரால் ஈடு செய்ய இயலும்? இந்த துயரத்திலிருந்து நீங்கி வரும் மனவலிமையை அவர் சீக்கிரம் பெறட்டும். அதுதான் நமது பிரார்த்தனையும்.