விழிமூடி யோசித்தால்- விமர்சனம்

ஃபாலோ பண்ணி போட்டுத்தள்ளும் கதை! ‘நாலு பேரை தேடிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு ஒருத்தனை பார்த்துட்டேன். அவனை போட்டுத்தள்ளாம விட மாட்டேன்’ என்று வாய்ஸ் கொடுத்துக் கொண்டே நகர்கிறது கேமிரா. படியேறி வளைந்து ஏறி குதித்து எப்படியோ அங்கு சென்றுவிடும் கேமிரா, நம்மையும் அப்படியே அழைத்துச்செல்ல, அங்கு ஒரு கொலை. அதுவும் நாற்காலியில் ஆளை கட்டிப்போட்டுவிட்டு கழுத்துல நறுக்!

ஒரு பெண்ணை நால்வர் கெடுத்திருப்பார்களோ, ஐயோ… கேங் ரேப்புக்கு ஆளாக போற புள்ள இதுதானா? அட… படத்துல இது பேசத்தெரியாத ஊமைப்பெண்ணா வேற இருக்கே, பரிதாபம்! இப்படியெல்லாம் நம்மை கவலைப்படுத்தி, கடைசியில் ‘இல்லீங்… கேங் ரேப் இல்லீங்… இது வேற’ என்கிறார் படத்தின் ஹீரோவும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கே.ஜி.செந்தில்குமார். கதை எப்படியோ? அதை நகர்த்திச் செல்லும் விதம் ஷார்ப்.

ஒருபுறம் செந்தில்குமாருக்கும், ஹீரோயின் நிகிதாவுக்குமான காதல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னொரு புறம், வில்லன்களை தேடி நகர்ந்து கொண்டேயிருக்கிறார் செந்தில். இரண்டும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் முடிவது நச் ஸ்கிரின்ப்ளே. தன் கதையை அவர் சொல்கிற போது, ஏதோ ஆஸ்பத்திரி ஐ.சி.யூ ரூமிலிருந்து பேசுவது போல அவர் பேசினாலும், ஆக்ஷன் காட்சிகளில் விழுந்து புரண்டு போராடியிருக்கிறார். அதுவும் போலீஸ் அதிகாரியான தன் அப்பாவே வந்து எச்சரித்தாலும், ‘என் லட்சியத்துல இருந்து பின் வாங்கப் போறதில்ல. முடிஞ்சா தடுத்துக்கோங்க’ என்று சவால் விடுவதெல்லாம் ஓ.கே. ஓ.கே. அந்த கோபத்திற்கு நியாயம் சேர்க்கிறது நிகிதாவின் கொலை. உயிரோடு இருக்கும் அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி செந்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பற்ற வைப்பது பகீர் பகீர் பயங்கரம்.

திடீரென பின்பாதியில், தனக்கு இருக்கும் விசேஷ சக்தியை செந்தில் விவரிக்கும்போதுதான், ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது. அப்படியொரு சக்தி இருக்கும்போது காதலியை கடத்தப் போகிறவர்களையும் முன் கூட்டியே உணர்ந்திருக்கலாமே? ஹீரோயின் நிகிதா, அவரது தோழிகள் என்று கூட்டமே இருந்தாலும், நிகிதா ஊமைப்பெண் என்கிற ஒரு உணர்வே அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது.

நண்பர்களின் உதவியோடு வில்லன் கோஷ்டியை கண்டுபிடிக்க, மீன் மார்க்கெட்டில் திரியும் ஹீரோ, அங்கிருந்து தப்பித்துவிடுவாரா என்கிற சின்ன பதற்றத்தையும் ஏற்படுத்த தவறவில்லை டைரக்டர் செந்தில்குமார். பின்னணி இசை காதை கிழித்தாலும், சில இடங்களில் திடுக்கிட வைத்திருப்பது நிஜம். இசை பி.அதீப்.

ஒளிப்பதிவாளரோ, அல்லது கருவியோ, இரண்டில் ஏதோ ஒன்றில் பழுது! சரியாக இருந்திருந்தால் இந்த படம் விழிமூடி யோசிக்க வைத்திருக்கும். சந்தேகமில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்க்கு அஜீத் அட்வைஸ்! கேட்பாரா அவர்?

Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல...

Close