வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க- விமர்சனம்
உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள். கதையே இல்லாத அல்லது நூலளவு கதையை வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெறும் தண்ணீராலேயே நிரப்பி ஜாலம் காட்ட ஒருவரால் மட்டுமே முடியும். அவர்தான் இந்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்! ஹ்ம்ம்… நடக்கட்டும்!
‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரிலெல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க’ என்பதுதான் இந்த சமூகத்திற்கு பழக்கப்பட்ட மேட்டராச்சே? கதை என்னப்பா?
இப்படியே வெட்டியா ஊர் சுத்திகிட்டு திரிஞ்சா எப்படி? பொறுப்பா ஒரு கல்யாணம் பண்ண வேணாம்? வீட்டில் சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். அவர்தான் பானு! உயிர் நண்பன் ஆர்யாவை விட்டு பானுவை இன்டர்வியூ பண்ண வைக்கிறார் சந்தானம். பொண்ணு ஓ.கே. ஆனால் கல்யாணத்தில் ஆரம்பிக்கிறது கலவரம். நண்பன் சந்தானத்தை கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு ஆர்யா செய்யும் குறும்புகள், பானுவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்த, முதலிரவே பத்து நாளைக்கு தள்ளிப் போகிறது. ‘அதுக்குள்ள உன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டு வா. அப்பதான் முந்தானைக்குள் இடம்’ என்கிறார் பானு.
நண்பனுக்கும் ஒரு பெண்ணை பார்த்து தள்ளிவிட்டுவிட்டு பானுவை அடைய வேண்டும் என்கிற லட்சிய புருஷராக களமிரங்கும் சந்தானம், ஆர்யா தமன்னாவை கோர்த்துவிடுகிறார். இவர்கள் அத்தனை பேருக்கும் நடுவில் நடக்கும் அசால்ட், ரியாக்ட், டகால்ட், டுகால்ட்டுகள்தான் படம். இறுதியில் ஆர்யா தமன்னாவை கைப்பிடித்தாரா? சந்தானத்தின் முதலிரவு சந்தோஷமாக நடந்தேறியதா? க்ளைமாக்ஸ்!
வாசு மாதிரி எவ்வளவு இடிச்சாலும் தாங்குற ஒரு நண்பன் கிடைச்சா பிரண்ட்ஷிப் உலகம் எப்படியிருக்கும் என்று ஏங்க வைக்கிறார் ஆர்யா. சரவணன் மட்டும் சும்மாவா? வாயாலேயே வறுத்த கடலை பொறிக்கும் சந்தானம், அந்த கேரக்டரை அப்படியே அசால்ட்டாக கடந்து போகிறார். இவ்விரண்டு கொம்புகளை நட்டு வாய் பந்தல் போடும் இவர்களின் அரட்டையால், திருவாளர் ரசிகனுக்கே கூட தேவைப்படுகிறது வி.எஸ்.ஓ.பி.
தன்னைதான் கலாய்க்கிறார் என்று தெரிந்தும் கூட, “செம கலாய் மச்சி…” என்று குஷியாகும் ஆர்யா மீது ஒரு சின்ன பச்சாதாபமே வந்துவிடுகிறது. ஒரு மனுஷன் இவ்வளவு வெள்ளந்தியாவா இருப்பான்? அப்பாடா. ஓழிஞ்சாண்டா… என்று சந்தானம் நிம்மதி பெருமூச்சோடு மனைவியை நெருங்கும் நேரம், டக்கென்று மூக்கை நுழைத்து “மச்சி… யாரும் நம்பள பிரிக்க முடியாதுடா” என்று ஃபீலிங் காட்டும் ஆர்யாவை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். ஒரு நாடகத்திற்காக குண்டு பூசணிக்காய் வித்யூ ராமனை லவ் பண்ணுவதாக இவர் டிராமா பண்ண, அதே வித்யூவால், வித்அவுட்டாகி அவர் ஓடி பதுங்குவதெல்லாம் தியேட்டரை கலகலப்பாக்கும். தொடர்ந்து சந்தானம் ஆர்யா காம்பினேஷன் திகட்டாமல் ஓடிக் கொண்டிருப்பது திருஷ்டி சுற்றி போட வேண்டிய மேட்டர்.
வழக்கம் போல விதவிதமான வார்த்தைகளை தேடிப்பிடித்து, வகை தொகையில்லாமல் சிரிப்பில் புரட்டி எடுக்கிறார் சந்தானம். ஒவ்வொருமுறையும் இவர் கொடுக்கும் ஐடியாக்கள் ராங் பிளேசில் லேண்ட் ஆகி, கடைசியில் உண்ணாவிரதம் அளவுக்கு போய் முடிவதெல்லாம் சிரிப்புக் கொத்துதான். ஆனால் யாரோ யாரையோ காதலிப்பாங்களாம். அவங்க பிரச்சனைக்கு தமிழ்நாட்டின் மொத்த மீடியாவும் மைக்கை தூக்கிக் கொண்டு பின்னால் திரியுமாம்… போங்கய்யா நீங்களும் உங்க கற்பனையும்!
பாகுபலியில் பார்த்த பரவசமே இன்னும் தீர்ந்து போகல. அதற்குள் மீண்டும் தமன்னா! ஏம்மா வெளியூர்ல தங்கி வேஸ்ட் பண்ற? மூட்டை முடிச்சை கட்டிகிட்டு சென்னைக்கே வந்து தமிழ்சினிமா ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டேயிருக்கலாமே? (அவ்வ்வ்வ்ளோ அழகு!) கடைசியில் இவருக்கும் பீர் ஊற்றிக் கொடுத்து பெரும் பாவத்தில் சிக்கிக் கொள்கிறார் டைரக்டர் ராஜேஷ். ‘நான் என்ன பிராண்ட் வேணும்னாலும் குடிப்பேன். இதைதான் குடிக்கணும், இப்படிதான் நடந்துக்கணும்னு நீ சொல்லக் கூடாது’. படத்தில் இப்படியும் ஒரு டயலாக் வருகிறது. ராக்கெட்டை விட்டவங்க, அதுல பெண்ணுரிமையையும் சேர்த்து கட்டி வுட்ருப்பாங்களோ? வாழ்க டைரக்டர் சார்.
‘வெயிட்டான’ ரோல்தான் வித்யூராமனுக்கு! முழி பிது(க்)ங்கி ரசிக்க வைக்கிறார்.
ஷகிலா கிழவியான பிறகும் விட மாட்டார் போலிருக்கிறது ராஜேஷ். போதும் சார்… அவரை உலகம் மறந்து அநேக நாளாச்சு. ஒரு காட்சியில் வந்தாலும், விஷால் ஜம் ஜம்தான். கம்பீரமான கட்டபொம்மனா இருந்தாலும், துப்பாக்கியை அவுத்து தூர வச்சுட்டு மனைவியிடம் மங்கூஸ் ஆகிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது.
டி.இமானின் இசையில் எல்லா குத்துப் பாடல்களில் ஒரு மெலடி வழிகிறது. அதுதான் சார் உங்க பலமும்…
பின்பாதியில் ஓவர் சரக்கடித்துவிட்டு குப்புற விழுந்து தேமே என்று கிடக்கிறது திரைக்கதை. படத்தை எப்படி முடிப்பது என்றே தெரியாமல் முழித்திருக்கிறார் ராஜேஷ்.
கணபதியும் இளவரசனும் நண்பேன்டா (Gin) என்ற உங்களின் நெக்ஸ்ட் படத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் அதுக்குள்ளே ஒரு புதுக்கதையை ரெடி பண்ணிக்கங்க பிரதர்! அரைச்ச மாவையே ருசிக்கறதுக்கு எங்களுக்கும் கஷ்டமாயிருக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன்