ஐயோ… இவரோட அட்ராசிடி தாங்கலையே?
செங்கல்லை ஒன்றோடு ஒன்று தேய்த்த மாதிரியான குரல்! அதுதான் இன்று துட்டு மேல் துட்டாக அறுவடை செய்யும் வயல்! திரையில் இவர் வந்தாலே ஆஹா ஓஹோவாகிறது தியேட்டர். எங்காவது விழா மேடையில் இவர் மைக்கை பிடித்தால், “எல்லாருக்கும் வணக்கம்” என்று சொல்வதற்கே பத்து நிமிஷம் ஆகிவிடுகிறது. அதுவரைக்கும் எழுகிற கைத்தட்டல்கள் நின்றால்தானே இவர் பேசுவதற்கு? இப்படி திடீர் காமெடியனாக சினிமாவில் நுழைந்து, மற்றவர்களை திடுக்கிட வைக்கும் காமெடியனாக உயர்ந்திருக்கிறார் வி.டி.வி கணேஷ்.
அதென்ன மற்றவர்களை திடுக்கிட வைப்பது? வேறென்ன? அவர் கேட்கும் சம்பளத்தால்தான்! சந்தானம் நடிக்கும் எல்லா படத்திலும் வி.டி.வி கணேஷும் இருப்பார். தனக்கென்று பெரிய சம்பளம் வாங்கிக் கொள்ளும் சந்தானம், அப்படியே தன்னுடன் நிழல் போல நின்று நித்திய சேவை செய்யும் தோழர்களுக்கும் கணிசமான ஒரு தொகையை சம்பளமாக வாங்கிக் கொடுக்கிறார். அந்த வகையில் கட்டெறும்பு சந்தானம் என்றால், சித்தெறும்புகள்தான் இவர்களெல்லாம். ஆனால் போகிற போக்கை பார்த்தால், கட்டெறும்பை விட கனத்துவிடுவார் போலிருக்கிறது இந்த சித்தெறும்பு.
நாளொன்றுக்கு மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம். “அதுக்கு பத்து பைசா குறைஞ்சாலும், இந்த கணேஷின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்காது” என்று கட் அண்டு ரைட்டாக சொல்லிவிடுவதால், கரும்பும் வேணும். பல்செட்டும் பாழாகிவிடக் கூடாது என்று பதற ஆரம்பித்திருக்கிறது சினிமா.
வாழ்வு கொடுத்த சந்தானம்தான் இவரை வழி நடத்தி குறைக்க வைக்கணும்!