வாகா விமர்சனம்
வாகாக படுத்துக் கொண்டு, வசதியாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு பின்னாலும், ‘வாகா’ எல்லையில் அவஸ்தைப்படும் இராணுவ வீரனின் நிம்மதியற்ற உறக்கம் இருக்கிறது. இதைதான் சொல்ல நினைத்திருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன். ஆனால் கும்மிடிப்பூண்டியில் குதித்து, கொருக்குப்பேட்டையில் குப்புற விழுந்து, தஞ்சாவூரில் கரையேறியிருக்கிறது திரைக்கதை. மருந்துக்கும் ‘ஹரிதாஸ்’ டச் இல்லை என்பதுதான் பேரதிர்ச்சி!
வீட்டில் அப்பா திட்டுகிறாரே என்பதற்காகவே ராணுவத்தில் சேரும் விக்ரம் பிரபுவுக்கு எல்லை பாதுகாப்பு ஏரியாவான வாகாவில் வேலை. உயரமான இடத்தில் நின்று கொண்டு, எல்லைகளை ஊடுருவிப் பார்ப்பதுதான் ஃபுல் டைம் எரிச்சல். ஆள் நடமாட்டம் இல்லை. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. ரேடியோ இல்லை. பாட்டு இல்லை. மொத்தத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இல்லை என்கிற அலுப்பான சுச்சுவேஷனலில், அழகான பெண் ஒருத்தி வருகிறாள் அவன் வாழ்வில்! கொடுமை என்னவென்றால் அவள் பாகிஸ்தானி. ஆடு வாயை வைத்தாலே சுட்டுப்போடுகிற நாடு. விக்ரம் பிரபுவை சும்மா விடுமா? எல்லை தாண்டி மாட்டிக் கொள்ளும் அவரை, ‘வச்சு செய்கிறார்கள்’ அந்நாட்டு ராணுவ வீரர்கள். அப்படியும் விடாத மன உறுதியோடு பாகிஸ்தானில் ஊடுருவி காதலியோடு எல்லை தாண்டுகிறார் விக்ரம் பிரபு. முடிவு? மகிழ்ச்சி!
ராணுவ வீரன் என்றால், தேசியக் கொடியை கட்டிக் கொண்டுதான் புரள வேண்டுமா? ஏன் துப்பட்டாவில் விழுந்து புரண்டால் அது புரட்சியில்லையா? என்றெல்லாம் இயக்குனர் யோசித்திருக்கிறார். அந்த தில்லுக்காகவே ரெண்டு டிக்கெட் எக்ஸ்ட்ரா சொல்றா மாப்ளே…!
ஆக்ஷன் படங்களில் எதார்த்தம் இருக்காது. எதார்த்தம் இல்லையென்றால் அதற்குள் மனம் ஊடுருவாது. வாகாவில் அதுதான் மைனஸ்! பல்லாயிரம் தோட்டாக்கள் சீற, எல்லாவற்றையும் கையாலேயே மறைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிறார் விக்ரம். இந்த கொடுமையை இன்னும் எத்தனை படத்தில்தான் பார்த்துத் தொலைப்பது? மற்றபடி விக்ரம் பிரபுவின் ஆக்ஷன் அவதாரம் வில்லின் நுனி போல விசேஷமாகதான் அமைக்கப்பட்டுள்ளது. இவரும் அஜய் ரத்னமும் போடும் அந்த பைட், செம த்ரில்!
ஹீரோயின் ரன்யா ராவ், அப்படியே பாகிஸ்தானி முகம். காட்சிகளை மிக அழகாக உள் வாங்கிக் கொண்டு, அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இடைவேளைக்கு பின் துவங்கி படம் முடியும் வரைக்கும் ஒருவித கண்ணீர் நிலையிலேயே இருக்கிறது அந்த சந்திர வதனம். விக்ரம் பிரபுவோடு சேர்ந்து காட்டில் நன்றாக ஓடவும் விட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்திருக்கிற அவரது உழைப்புக்கு ஒரு கைதட்டல். ஆனால் என்ன செய்ய? எல்லாம் காற்றில் பாய்ந்த தோட்டா!
படத்தில் கருணாஸ் இருக்கிறார். நகைச்சுவைதான் மீசை முடியளவுக்கு கூட இல்லை.
‘நான் ஒண்ணும் பாகிஸ்தான் பொண்ணை காதலிக்கல… நான் காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி. அவ்ளோதான்’ என்கிறார் விக்ரம். இப்படி எங்கேயோ சில இடங்களில் மட்டும் கவனிக்க வைக்கிறது வசனம். எல்லை பிரச்சனையை தீப்பந்தத்தில் நனைத்து பேசுவதற்கு எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார் வசனகர்த்தா.
எல்லை தாண்டிப் போன பின் எரிக்கப்பட்டதா பஸ். அல்லது இந்திய எல்லைக்குள்ளேயே எரிக்கப்பட்டதா? இந்திய எல்லைக்குள்தான் என்றால், விக்ரம் பிரபுவும் அவரது நண்பர்களும் ராணுவத்தினர்தானே? அவளை எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அந்தப்பக்கம் ஏற்றி விட்டுவிட்டு வரலாமே? படு குழப்பமான ஏரியா அது. அதுவும் அந்த பஸ் கிளம்பும்போது ஒரு காஸ்ட்யூமிலும், எரியும் போது இன்னொரு காஸ்ட்யூமிலும் இருக்கிறார் விக்ரம் பிரபு. இத்தனைக்கும் பஸ் கிளம்பி நாலு கி.மீ க்குள்தான் சம்பவம்.
மற்றபடி மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார்கள். ஈயின் இறக்கை பறக்கிற சவுண்ட் கூட அவ்வளவு துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு அப்படியே கண்களையும் மனசையும் அள்ளிக் கொண்டு போகிறது. டி.இமானின் பாடல்கள் இனிமை என்றால், பின்னணி இசை கம்பீரம்.
கதையின் இழை நன்றாகதான் இருக்கிறது. அதை சொல்லிய விதத்தில்தான் ஒரு நூறு பிழை! காட்சிக்கு காட்சி ஹீரோ தன் ‘மைன்ட் பவரை’ காட்டியிருந்தால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருந்திருக்காது. படத்தின் முடிவை ஸ்டன்ட் மாஸ்டரின் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்ட டைரக்டரின் பேனாவுக்கு ஒரு குட்டு.
வெந்தும் வேகாமலும் இருக்கிறது வாகா!
-ஆர்.எஸ்.அந்தணன்
https://www.youtube.com/watch?v=ODkfwwE7hIw