நாங்க பிரண்ட்ஸ்தான்… ஆனால் காலை வாரிக்குவோம்!

முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தவறாமல் பேட்டிகளில் உச்சரிக்கும் ஒரு தத்துபித்துவம், “எங்களுக்குள்ள போட்டியிருக்கு. ஆனா பொறாமையில்ல…” என்பதுதான். விஷால், ஜீவா, ஆர்யா போன்ற இளம் தலைமுறை ஹீரோக்கள் தங்களுக்குள் அப்படி பழகி வந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் “நாங்க பிரண்ட்ஸ்தான்” என்று கூறிவந்த விஜய்யும் அஜீத்தும் அப்படி நடந்து கொள்கிறார்களா?

பார்ப்பதும் கேள்விப்படுவதும் அப்படியில்லையே… என்ன செய்வது? இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விஷயத்தையே உதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட பொட்டென்று பொறி கலங்கினார் போல விளங்கும். இரு பெரும் ஹீரோக்களான இவர்கள், தங்கள் படங்களின் ட்ரெய்லரையோ, தலைப்பையோ வெளியிடும் போது உலகம் திடுதிடுக்கிறது. எல்லா ரசிகர்களும் ஓரிடத்தில் கூடி, வான் வழி, வயர் வழி, சிக்னல்களை கூட ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறார்கள். இதில் “என்னோட ஹீரோதான் டாப். உன்னோட ஹீரோ வெறும் டுபாக்கூர்” என்று அடுத்தவர் தாவாங்கட்டையில் அப்பளக்கட்டையால் போடுவதும் அசுர வேகத்தில் நடக்கிறது.

புலி படத்தின் ட்ரெய்லர் 2 வரும் போதுதான் தனது படத்தின் தலைப்பை அறிவிக்கிறார் அஜீத். அன்று மாலை இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விட்டுத்தள்ளுங்கள். அது கால காலமாக நடந்து வருவதுதான். ஆனால் விஜய்யின் ட்ரெய்லருக்கு வந்திருக்க வேண்டிய அத்தனை கவனமும் அஜீத்தின் தலைப்பு மீதும் குவிந்தது. அஜீத்தின் தலைப்பு மீது குவிய வேண்டிய அத்தனை கவனமும், விஜய்யின் புலி ட்ரெய்லர் பார்ட் 2 விலும் குவிந்தது.

இப்படி வெந்தது பாதி, வேகாதது பாதி என்று பரவலாக சென்று சேர்வதால் யாருக்கு என்ன லாபம்? யோசிக்க வேண்டியது இந்த இரு பெரும் ஹீரோக்களே தவிர, வேறு யாருமல்ல. நல்லவேளை… விநியோகஸ்தர்களின் எதிர்பால் மட்டுமே இருவரது படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வராமலிருக்கிறது. இல்லையென்றால் அதுவும் நடக்கும் போலிருக்கிறது.

எதிர்காலத்திலாவது ஒருவர் பேண்ட் மாட்டும்போது, இன்னொருவர் சட்டையை கழட்டுகிற வேலையை செய்யாமலிருப்பார்களா?

Read previous post:
சோனா முடிவு, திரையுலகம் திடுக்!

“எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை” என்று மன்சூரலிகான் அறிவித்தால் எப்படி உலகம் வாய்விட்டு சிரிக்குமோ.... அதைவிட பெரிய கெக்கேக்கே... இதுதான். நடிகை சோனா இனி கவர்ச்சியாக...

Close