சண்டி வீரன் பாலா சாரே வியந்த கதை! அதர்வா யெஸ் சொன்னதன் பின்னணி
தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை சொல்வதில் மற்றுமொரு பாரதிராஜா என்று ஊரே புகழ்ந்து கொண்டிருந்தபோதுதான், தன் கண்ணே தன் மீது பட்டது போல, நையாண்டி போன்ற மோசமான மொக்கை அருவாளால் தன் கழுத்தை தானே நீவிக் கொண்டார் சற்குணம். தோற்றவர்கள் தோற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? அவர்களை கை தூக்கிவிடுகிறவர்கள்தான் யார்? என்ற கருத்தாழம் மிக்க கேள்விகளுக்கெல்லாம் வேலை வைக்காமல், நல்ல கதையை மறுபடியும் சொன்ன சற்குணத்தை தனது கம்பெனிக்கே படம் இயக்கித்தர கூறினார் புதுமை இயக்குனர் பாலா.
எல்லாம் சுபமாக நடந்தேற, அதர்வா கயல் ஆனந்தி ஜோடியாக நடிக்க சண்டிவீரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சற்குணம். இப்படத்தின் ஒரு பாடலையும், ட்ரெய்லரையும் பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தார்கள். நோ டவுட்… சற்குணம் ரீ என்ட்ரி! அதுவும் களவாணியை விட பெரிய ஹிட்டுடன்!
படத்தின் ஹீரோ அதர்வா சண்டிவீரன் பற்றி சொல்வதென்ன?
பரதேசி படத்திற்கு பிறகு என்னை தேடி நிறைய கதைகள் வந்தன. சார்… ஓப்பன் பண்ணினா அருவாளால் ஒரே போடு. சதக். கழுத்து கீழே விழுதுன்னு ஆரம்பிப்பாங்க. வெட்டுறது ஹீரோதானே?ன்னு கேட்டா, இல்ல சார்… வெட்டுபட்டு விழுறதுதான் ஹீரோம்பாங்க. இப்படி ஏகப்பட்ட கதைகளை கேட்டு அலுத்துப் போயிருந்த நேரத்தில்தான் பாலா சார், டேய் உடனே வா. ஒரு கதை கேளு என்றார். இந்த கதையை கேட்டுட்டு நான் அசந்துட்டேன் என்று பாலா சார் சொன்னப்பவே ‘நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டேன். ஏன்னா, அவரே அசந்து போற மாதிரி ஒரு கதையிருக்குன்னா, அதை நான் கேட்டுதானா முடிவு பண்ணணும்? ஷுட்டிங் ஆரம்பிக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் கதையே கேட்டேன். அதுக்கு முன்னாடியே கால்ஷீட் கொடுத்துட்டேன் என்றார் அதர்வா.
தஞ்சாவூர் நெல் வயல், சலசலக்கும் பம்ப் செட், பதற பதற அருவா, பார்வையிலேயே காதல் என்று ட்ரெய்லர் துவங்கிய நொடி நேரத்தில் அசரடித்திருக்கிறார் சற்குணம். இந்த குணம் மாறாம அப்படியே மெயிட்டெயின் பண்ணுங்க டைரக்டர்!