சீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை? இனி என்னாகும் சீன பொருளாதாரம்?

கிங்மாங் ச்சுங் மற்றும் பன்கீன் ப்புங் உள்ளிட்ட பல்வேறு வட்ட செயலாளர்களும், சீனாவின் முக்கிய எதிர்கட்சிகளும் நேற்றிலிருந்தே நெஞ்சாங்கூட்டில் கஞ்சா பாய்கிற அளவுக்கு பீதியாகிக் கிடக்கிறார்கள். முக்கியமாக கொரானோ வைரஸ் உருவாகிய வுகான் மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி இரண்டு வாரங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பல கடைகள் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் சாக்ஷி அகர்வால் என்ற ஒரே ஒரு தமிழ் நடிகை எடுத்த கொள்கை முடிவுதான்.

இந்த கொரானோ காலத்தில் என்ன செய்வது ஏது செய்வதென புரியாமல் விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து அதை பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்பி வந்த சாக்ஷி அகர்வால், ஒரு சித்தெறும்பு கூட அத்தகைய போட்டோக்களுக்கு ஜெர்க் ஆகவில்லையே என்று வருந்தி வேதனைப்பட்டு கண்ணீர் விட்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் இந்த விபரீத முடிவு அவரது மூளைக்கு எட்டியிருக்க வேண்டும். துணிச்சலாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்திய சீன எல்லைகளில் புதுப் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

என்னவாம்? அவர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பை படித்தால் சட்டென புரியும் உங்களுக்கு.

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று சாக்ஷி அகர்வால் கூறினார்.

முன்னணி நாளிதழ்களில் இதை தலைப்பு செய்தியாக போடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த சாக்ஷிக்கு இப்போதும் ஒரு சின்ன ஏமாற்றம். எட்டாம் பக்கத்தில் இத்துனூண்டு செய்தியாகவே வெளியாகியிருக்கிறது இந்த விஷயம். இந்த இருட்டடிப்புக்கு பின்னால் சீனாவின் சதி இருக்குமோ என்று அஞ்சிய சாக்ஷி, விரைவில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிடவிருக்கிறாராம்.

வர வர கொரானோவே தேவலாம்னு ஆவுதுல்ல?

Read previous post:
பொன்மகள் வந்தாள் – விமர்சனம்

Close