டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்….ய்? பிரஸ்மீட்டில் மிரள வைத்த ஹீரோ
ஒரு படத்தின் நிஜமான வெற்றி அந்த படத்தின் ஹீரோவை எப்படியெல்லாம் படுத்தி எடுக்கும் என்பதற்கு யாமிருக்க பயமே-வும் அந்த படத்தின் ஹீரோ கிருஷ்ணாவும்தான் உதாரணம். படம் ரிலீஸ் ஆகி கிட்டதட்ட பத்து நாட்கள் ஆகியிருக்கும். இன்னும் எல்லா தியேட்டர்களுக்கும் விசிட் அடித்துக் கொண்டிருக்கும் இவர் அநேகமாக தினந்தோறும் மூன்று ஷோக்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் . இது அவர் தனிப்பட்ட பாடு. ஆனால் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….’ என்று அவர் குரல் கொடுக்க, ஒரு வீடியோ கிளிப்பிங்சில் விஜய் இப்படி அலறுவாரே, அதற்கு இவர்தான் டப்பிங் கொடுத்தரோ என்று சிந்திக்கிற அளவுக்கு போனார்கள் பத்திரிகையாளர்கள்.
சற்று தாமதமாக அந்த ஹாலுக்குள் நுழைந்திருந்தார் கிருஷ்ணா. அதற்குள் எல்லாரையும் மேடையில் ஏற்றிய யாமிருக்க பயமே இயக்குனர் டீக்கே பேசவே ஆரம்பித்திருந்தார். உள்ளே நுழைந்த கிருஷ்ணா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..ய் என்று அவரை பார்த்து குரல் கொடுத்ததுதான், இப்போது எல்லாரது வாயையும் கிண்டியிருக்கிறது. ஒரு வளரும் ஹீரோ கொஞ்சம் கூட பிரஸ்மீட்டில் இருக்கிறோம் என்கிற பொது நாகரீகம் இல்லாமல் இப்படி அலறியது அவரது ஆர்வ மிகுதியை வெளிப்படுத்தினாலும், அடக்கம் தம்பி அடக்கம்… என்கிற அறிவுரை வழங்கவும் வழி கோலியிருக்கிறது.
‘ஷுட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாள் எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவேயில்ல. யார்றா இவன்’ என்று நானே மனசுக்குள் நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறம்தான் நாங்க நல்ல பிரண்ட்ஸ் ஆனோம் என்று அங்கு ஏற்பட்ட டேய்ய்ய்ய்ய்ய்… சம்பவத்திற்கு சாதுர்யமாக விளக்கமளித்தார் டீக்கே.
இந்த சக்சஸ் மீட்டில் மயில்சாமியின் பேச்சு வழக்கம் போல டாப். ‘நான் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ஒரு பாலிஸி வச்சுருக்கேன். தமிழ்நாட்டு பார்டர் தாண்டி ஷுட்டிங் வச்சா அதுல நடிக்கறதில்லேங்கறதுதான் அது. ஏன்னா எனக்கு தமிழை தவிர ஒண்ணுமே தெரியாது. எழுத படிக்க வரவே வராது. இங்கன்னா சமாளிச்சுப்பேன். மொழி தெரியாத ஊர்ல வுட்டா என்னாவுறதுன்னுதான் இப்படி ஒரு சேஃப்ட்டி. ஆனால் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொள்றதுக்கு முன்னாடி கேட்ட கேள்வி ஷுட்டிங் எங்கன்னுதான். நைனிடால்னு சொன்னாங்க. நான் நடிக்கலேன்னு சொல்லிட்டேன். எப்படியோ வற்புறுத்தி நடிச்ச வச்சாங்க. அதுக்கான பலனை நான் அனுபவிச்சேன். டெல்லியில இறங்கி அங்கேயிருந்து கார் போவுது போவுது… போயிகிட்டேயிருக்கு. கூட வந்த டிரைவர் இந்தியில என்னமோ கேக்குறான். நான் ஹை ஹைன்னு சமாளிக்கிறேன்.‘
‘எப்படியோ மலையுச்சியில் நடந்த ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போய் இறங்கினதும்தான் உசுரே வந்திச்சு’ என்றார். இவருக்கு மட்டுமல்ல, இவர் போய் இறங்கியதும்தான் யூனிட்டுக்கே உயிர் வந்திச்சாம். ஏன் தெரியுமா? சுமார் ஒரு மாதமாக எல்லாரும் சப்பாத்தியும் சப்ஜியுமாக உண்டு வெறுத்திருந்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் சுட சுட நம்ம ஊரு சாப்பாடு செய்து போட்டாராம் மயில்சாமி.
அட… ‘சமை‘யில்சாமி.