2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்… கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும் பாராட்டுகள் வேறு யாருக்கும் அமையுமா என்றால், சத்தியமாக இல்லை! இரண்டாவது தலைமுறையும் ரஜினியை கொண்டாடும் இந்த நேரத்தில் ரஜினி செய்ய வேண்டியது என்ன?

ஐயய்யோ… அரசியல் பக்கமே நாம் நுழைந்து விவாதிக்கப் போவதில்லை. ரஜினி செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்புக்கு முன்னால், ‘சினிமாவில்’ என்றொரு துணை வார்த்தையை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளவும். ஆனால் ரஜினி செய்தேயாக வேண்டிய முக்கியமான விஷயம்தான் இது.

அண்மையில் ரஜினியும் டைரக்டர் பி.வாசுவும் சந்தித்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த சந்திப்பின் போது ரஜினிக்கு பி.வாசு கதை சொன்னதாகவும் கூறுகிறார்கள் இங்கே. அப்படியென்றால் லிங்காவுக்கு பிறகு ரஜினி நடிக்கப் போகும் படத்தை பி.வாசு இயக்கிவிடுவாரோ என்கிற அச்சம் தானாகவே ரஜினி ரசிகர்களுக்கு வருவது இயல்புதான். சமீபத்தில் வெளிவந்த லிங்காவே கூட கே.எஸ்.ரவிகுமார் தவிர்த்து வேறு யாரும் இயக்கியிருந்தால் எப்படியிருக்கும் என்பதை ரஜினியின் அதிதீவிர ரசிகர்கள் யோசிக்காமலிருந்திருக்க முடியாது. அப்படியிருக்க, ரஜினி மீண்டும் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழத்தை நாடுவது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.

ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு பொருத்தமான இயக்குனர் யார்? இந்த கேள்வியை ஒவ்வொரு ரசிகனும் உரக்க எழுப்பினால், கிடைக்கிற ஓட்டுகளில் வென்று வாகை சூடுகிறவர் டைரக்டர் ஹரியாகதான் இருப்பார். ஒரு ஆக்ஷன் படம் வெறும் வெட்டு குத்தாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவரல்ல அவர். சில காட்சிகளை மெனக்கெட்டு உருவாக்கி கைத்தட்டல் பெறுவதில் அவருக்கு நிகர் அவரே. ஊரெல்லாம் போலீஸ் பட இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஹரி தைக்கிற காக்கி சட்டைகள் மட்டும் கம்பீரமாக இருப்பதேன்?

வில்லேஜ் பேக்ரவுண்டில் படம் எடுக்கிற ஹரி, ரஜினிக்கு தோதான கதைகள் இல்லாமலா இருப்பார்? ஏன் ஒருமுறை கூட ஹரியை அருகில் சேர்ப்பதில்லை ரஜினி? ஹரியின் மாமனாரும் ரஜினியின் உற்ற நண்பருமான விஜயகுமார் பலமுறை இந்த முயற்சியில் ஈடுபட்டும் என்ன காரணத்தினாலோ செவி கொடுக்காமலே இருக்கிறார் அவர். ஹரி படத்தில் நடித்தால், தினந்தோறும் எக்சர்சைஸ் செய்ய வைப்பார். ஓட வைப்பார். மூச்சிரைக்க வைப்பார் என்கிற குற்றச்சாட்டுகள் இல்லாமலில்லை.

ஆனால் ரஜினி என்கிற மாபெரும் ஜன சக்தியை இயக்குகிற போது எல்லாவற்றுக்கும் எக்ஸ்யூஸ் கொடுப்பார் ஹரி என்பதில் சந்தேகமில்லை. ரஜினி ரசிகர்களே… எங்கே ஒரு முறை உரக்க குரல் எழுப்புங்கள்…. உங்கள் தலைவரின் காதுகளுக்கு கேட்கிறதா பார்ப்போம். அதைவிட முக்கியம் பி.வாசுவுக்கு கேட்க வேண்டும் உங்கள் குரல்!

Read previous post:
நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்

Naalu policeum nalla iruntha oorum The consistency is the mark of a Master,JSK film corporation the masters in identifying films...

Close