நடிகர் சங்க பிரச்சனை! கண்டுகொள்ளாத கமல் ரஜினி? முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்

‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் நிலைமை இப்படிதான். ஆரம்பத்தில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத சிறு நடிகர்கள், மற்றும் மிடில் நடிகர்கள் பலர் இப்போது லேசாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, என்எஸ்கே, எஸ்எஸ்ஆர் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது பொன்னான நேரத்தை செலவிட்ட இடம் அது. ஆனால் ரஜினியோ கமலோ அஜீத்தோ இந்த நடிகர் சங்கத்தின் மண்ணை மிதித்தே பல வருஷங்கள் ஆகிவிட்டது என்கிற கவலை அவர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது. பிரச்சனையில்லாத நேரங்களில் வரத் தேவையில்லை. ஆனால் நடிகர் சங்கமே இரண்டாக பிளவு பட்டு கிடக்கிறது. இந்த நேரத்தில் சம்பந்தமேயில்லாத சாமியார்கள் எல்லாம் உள்ளே வந்து பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியோ, கமலோ ஒரு கோடு கிழித்தால் அதை தாண்டுகிற மனநிலையில் ஒருவர் கூட இல்லாத இந்த சங்கத்தில் ஏன் இருவரும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்த கேள்வியை அழுத்தமாகவும் வருத்தமாகவும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் இப்போது.

லிங்கா பிரச்சனையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பல நாட்கள் ரா பகலாக பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக்கினார். ஆனால் இன்று அவருக்கே ஒரு பிரச்சனை. ஏன் ரஜினி உள்ளே வரவில்லை? விஷாலை கண்ணும் காதும் வைத்த மாதிரி வரச்சொல்லி, பிரச்சனையை பேசி தீர்த்து வைத்திருக்கலாமே என்கிற முணுமுணுப்பும் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இதே கமல் விஸ்வரூபம் பிரச்சனையில் சிக்கியபோதும் சரத்குமார் அழையா விருந்தாளியாக வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். அவ்வளவு ஏன்? உத்தம வில்லன் பிரச்சனையின் போது கூட சரத்தின் அக்கறையால்தான் கமல் தோளில் இருந்த பாரம் பெருமளவு நீங்கியது.

இப்படியெல்லாம் தங்கள் பிரச்சனையை அக்கறையோடு பார்த்துக் கொண்ட நடிகர் சங்க தலைமைக்கு, நடிகர் நடிகைகக்கெல்லாம் தலைமையாக விளங்கிக் கொண்டிருக்கும் கமல், ரஜினி இருவரும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாளைக்கே இருவரும் இதில் தலையிட வேண்டும் என்று கொந்தளிக்கிறது பெயர் சொல்ல விரும்பாத நடிகர்களின் கூட்டம்.

மளக்குன்னு புடிச்சு பொளக்குன்னு ஒடிச்சு போட்டுட்டு போற விஷயத்தை இம்புட்டு நாளா வேடிக்கை மட்டும் பார்க்குறீங்களே மன்னாதி மன்னன்களே…

1 Comment
  1. SATHYAN says

    LONG LIVE OUR TAMIL LIVING GOD SUPER STAR RAJINI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாபநாசம் படத்திற்கு தடை! விநியோகஸ்தர் கூட்டமைப்பு முடிவு! கமல் ரசிகர்கள் அதிர்ச்சி!

என்னடா... இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே... பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு...

Close