சாட்டை ரெடி! தப்பிப்பாரா நயன்?
அண்மையில் வெளிவந்த மாயா திரைப்படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஹிட்! நயன்தாரா மெயின் ரோலில் நடிக்க, அவரை விட மெயின் ரோலில் நடித்திருந்தன சில பேய்களும் பிசாசுகளும். நெடுஞ்சாலை ஆரிக்கும் இது முக்கியமான படம். தெலுங்கில் இப்படத்தை வெளியிட்டிருந்தவர் பிலிம்சேம்பர் கல்யாண். நமது தமிழ் படங்களுக்குதான் டிமிக்கி என்றில்லை. அவ்வளவு பெரிய அமைப்பின் தலைவரான அவருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டார் நயன்தாரா. எந்த பிரமோஷனுக்கும் தலைகாட்டவில்லை. அதைவிட கொடுமை இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. அதே நாளில் சேலத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு போயிருந்தார் அவர்.
சேலத்தில் இரும்பு உருக்காலைதான் பேமஸ். ஆனால் அந்த இரும்பையே உருக்கி, இனிப்பாக்கிவிட்டார் நயன்தாரா. கொதிக்கும் வெயிலில் லட்சக்கணக்கான மக்கள் அங்கே திரண்டிருக்க, அவரது கார் உருப்படியாக மேடையை அடைந்தது விந்தையிலும் விந்தை. அந்தளவுக்கு வெறியோடு காரை தொட்டு தடவி சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள் ரசிகர்கள்.
போகட்டும்… சென்னையில் நடந்தது என்ன? இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் ஹாலிவுட் இயக்குனர் எரிக் இங்கிலாந்தே இந்த படத்தை பார்த்து வியந்து போனார் என்றும் கூறினார் இயக்குனர் அஸ்வின் சரவணன். அதற்கபுறம் கேள்விகள் நயன்தாரா பக்கம் போனது. இந்த படத்தை தியேட்டரில் தனியாக அமர்ந்து பார்த்தால் ஐந்து லட்ச ரூபாய் பரிசை நயன்தாரா கையால் தருவதாக கூறியதாகவும், அதை வழங்க நயன்தாரா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கல்யாண், முதலில் யாரும் தனியாக அமர்ந்து படம் பார்க்கவே தயாராக இல்லை என்றார்.
நயன்தாரா பட பிரமோஷன்களுக்கு வராதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கல்யாண், “இனிமேல் யாரும் அப்படி தப்பிக்க முடியாது. அதுகுறித்து கடுமையாக முடிவெடுக்கப் போகிறோம். ஒப்பந்தம் போடும்போதே பட பிரமோஷன்களுக்கு வருவேன் என்றும் குறிப்பிடவுள்ளோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து இந்த முடிவை எடுப்போம்” என்றார் சூடாக!