இங்கே அந்தணன் யாரு?

‘உங்களில் யார் பிரபுதேவா?’ என்பதை போலதான் அந்த கேள்வி இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், பைக்கை நிறுத்திவிட்டு நான் பிரஸ்மீட் நடக்கும் இடத்தை அடைவதற்குள் ஏழெட்டு பேர் கிராஸ் ஆகிருந்தார்கள். எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி, “நா.முத்துக்குமார் உங்களை தேடினாரு” என்றார்கள்.

சுமார் பத்து வருடங்கள் இருக்கும் அது நடந்து. அப்போது நான் ‘அடிக்கடி’ என்ற பிளாக்கில் எழுதிக் கொண்டிருந்தேன். அவிழ்த்துக் கொண்டிய சுண்டைக்காய் குவியல் மாதிரி, அநேகமாக உலகத்தின் எல்லா மூலையிலிருந்தும் ஆஹா… ஓஹோ என்ற பாராட்டுகள் குவிந்த நேரம் அது.

நான் முத்துக்குமாரை சமீபித்திருந்தேன். “நான்தான் அந்தணன். தேடுனீங்களாமே?” படக்கென்று கைகளை பிடித்துக் கொண்டார்.

“அண்ணே… நான் இப்பதான் எல்லாத்தையும் மொத்தமா படிச்சேன். வேலூர்ல ஒரு என்ஜினியரிங் கல்லூரிக்கு சீப் கெஸ்டா போயிருந்தேன். அந்த கல்லூரி வேந்தர்தான் உங்க அடிக்கடி பிளாக் பற்றி சொன்னார். உங்களை பார்த்தால் போன் போட்டு அவர்ட்ட கொடுக்கச் சொன்னார்”. எவ்வித தயக்கமும் இன்றி, சம்பந்தப்பட்ட கல்வி தந்தைக்கு போன் அடித்து, “அந்தணன் லைன்ல இருக்காரு…” என்று அவர் கொடுத்ததும், அதற்கப்புறம் நான் பரவசப்பட்டதும்… இதோ- நேற்று நடந்தது போல இருக்கிறது.

உலகம் வியக்கும் ஒரு கவிஞன், ஒரு முறை கூட ஈகோ பார்த்ததேயில்லை. நான் எதுக்கு அவருக்கு போன் பண்ணணும். அவரே பண்ணட்டுமே என்று அவர் நினைத்ததேயில்லை. நான் நியூதமிழ்சினிமா.காம் ல் எழுதி வந்த ‘கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம்’ கட்டுரை வெளியாகும் ஒவ்வொரு கிழமை நாட்களிலும், எனக்கு எங்கிருந்தாலும் போன் அடிக்கிற முதல் ரசிகர் அவர்தான்.

“அண்ணே அதை புத்தகமா போடலாம். தம்பிய விட்டு பேசச் சொல்றேன்” என்றவர், அவரது தம்பி நா.ரமேஷ்குமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிட்டது எனக்குக் கிடைத்த பெரும் பேறு!

தன் எழுத்தை பிறர் நேசிக்கும் அதே வேளையில் பிறர் எழுத்தை தான் நேசிக்கும் பெரும் பண்பாளராக இருந்தார் நா.முத்துக்குமார்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் சூழ, யார் யார் தோளிலோ மிதந்து சென்று மின் மயானத்தில் அமைதியடைந்தது அவரது உடல்! எழுத்தை மட்டுமே நேசித்த அவரது உயிர், இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த உயிர் வாசிப்பதற்காகவே அவரால் நேசிக்கப்பட்டவர்கள் நிறைய எழுத வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நா.முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டு அழுத வைரமுத்து!

நா.முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து, கதறி அழுதது அங்கு வந்திருந்த எல்லாருடைய நெஞ்சையும் உலுக்கியது. திரைப்பட பாடலாசிரியர்களில், வைரமுத்துவின் பாடல்களுக்கு இணையாக...

Close