மண்டப பில்லை கட்டிடுங்க… விஷால் அணிக்கு ரஜினி வைத்த செக்!
‘அவரிடம் ஆசி வாங்கிட்டா போதும்… மற்றதெல்லாம் தூசிதான்’ என்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு தேர்தலின் போது அவர் வீட்டு கதவை தட்டுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை. “நீ வர்றியா? தாராளமா வா… உனக்கு விபூதி வச்சுருக்கேன். உனக்கு நேர் எதிர் கட்சியிலேர்ந்து இன்னொருத்தர் வர்றாரா? வரட்டும்… அவருக்குதான் பஞ்சாமிர்தம் இருக்கே?” என்று வர்றவர்களுக்கெல்லாம் புன்சிரிப்பையும் பிரசாதங்களையும் வழங்கி அனுப்புகிற பெரும் குணம் இருக்கிறது ரஜினிக்கு.
கிட்டதட்ட நடிகர் சங்க விவகாரத்திலும் அதுவே ‘ரிப்பீட்’ ஆக, ‘அப்பீட்’ ஆகியிருக்கிறார்கள் அத்தனை பேரும்.
தன்னை முதன் முதலில் சந்திக்க வந்த விஷால் டீமை வரவேற்ற ரஜினி, அவர்களிடம் சங்கம் குறித்த பல சந்தேகங்களையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டார். இரண்டாவது முறையும் அவரை சந்தித்து ஆசி பெற்றது விஷால் டீம். மூன்றாவது முறை ஒரு பிரமாதமான லிப்ட் கிடைத்தது அவர்களுக்கு. விஷால் டீமின் ஆதரவாளர் கூட்டத்தை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்த ஆசைப்பட்டவர்களுக்கு ரஜினியிடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை.
அது போதாதா? போட்ட்ட்…டா… அந்த ஆண்டவனே நம்ம பக்கம் என்று முழங்கியவரின் ஆசி நமக்குதான் என்று முடிவெடுத்துவிட்டார்கள் விஷால் அணியினர். போடா… அந்த ரஜினியே நம்ம பக்கம் என்று அவர்கள் சொல்லி கூத்தடிக்க ஆரம்பிப்பதற்குள் அடுத்த திருப்பம்.
“நான் கான்ட்ரவர்ஸியில சிக்க விரும்பல. இப்ப உங்களுக்கு மண்டபம் கொடுத்தால், நான் ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி ஆகிடும். அனால் மண்டப பில் நாலரை லட்சத்தை கட்டிட்டு ரசீது வாங்கி வச்சுக்குங்க” என்றாராம் ரஜினி. அப்புறமென்ன? பில்லை கட்டி விட்டார்கள்.
அதே மாதிரி சரத்குமாரிடமும் சொல்லிவிட்டாராம் ரஜினி. ஆனால் ஒன்று. மண்டப பில் சரத்குமார் அணிக்கு மட்டும ஐந்து லட்சமாம். “ஆ… ஹை! ஆ…ஹை! அப்ப கூட எங்களுக்கு ஐம்பதாயிரம் குறைச்சுட்டாரே…” என்று ஜில்லாகிறது விஷால் அணி.
ஒரு மனுஷன் மண்டையில பூந்து எறும்பா கடிச்சு வைக்கறதுலதான் எவ்வளவு சுகம் இருக்கு?