செல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன்? வெளிவராத சுவாரஸ்யமான தகவல்!
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம்! இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம் நடக்கும்கிறீங்க என்று கோடம்பாக்கம் பாக்கு இடிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், ரெண்டு பேரின் கேரக்டர் அப்படி. செய்யும் தொழிலே தெய்வம் என்று உலகம் சொன்னால், அந்த விஷயத்தில் நான் நாத்திகன்ப்பா என்பார்கள் வாய் கூசாமல். ஷுட்டிங்கை கேன்சல் செய்வது என்பது இவர்களுக்கு பாப்கார்னை இறைப்பது மாதிரி ரொம்ப ரொம்ப சுலபம்.
இப்படிப்பட்டவர்களை நம்பி எறங்கி அவஸ்தைப்பட போற மவராசன் யாருன்னே தெரியலையே என்று அந்த மூன்றாவது நபருக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தது சினி ஃபீல்டு. இப்படி கயிறே இல்லாமல் கடலில் இறங்கி முத்தெடுக்க நினைத்தது வேறு யாருமல்ல, அண்மையில் வந்ததே… வாயை மூடி பேசவும் என்ற படம். அதன் தயாரிப்பாளர்தான். சரி, அதற்கப்புறம் என்னாச்சு?
முதல் நாள் ஷுட்டிங். தனது கருப்பு கண்ணாடியை நன்றாக துடைத்துப் போட்டுக் கொண்டு வந்துவிட்டார் செல்வராகவன். ஆனால் சிம்பு? காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தும் ஆள் வரவேயில்லை. போன் அடித்தார்கள். வீட்டுக்கு ஆள் அனுப்பினார்கள். தெரிந்தவர், அறிந்தவர், உற்றார், உறவினர், தக்கார், தகவிலார் அத்தனை பேரிடமும் சொல்லியனுப்பினார்கள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருந்தாராம் தயாரிப்பாளர். அன்றைய பொழுது தர வேண்டிய பேட்டாவோடு ஒரு ஷாட் கூட எடுக்காமல் முடிந்தது. மறுநாளும் படப்பிடிப்பு.
சிம்பு காலையிலேயே வந்துவிட்டார். டைரக்டர் வரணுமே? பத்து, பதினொன்னு, ஒண்ணு, மூணு என்று கடிகாரம் ஓடியதே தவிர செல்வா வரவில்லை. இதையும் கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் தயாரிப்பாளர். மறுநாள்…
இரண்டு பேருமே சொல்லி வைத்த மாதிரி வந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர்தான் பேச ஆரம்பித்தார் கம்பீரமாக. ‘சார்… உங்க ரெண்டு பேரை பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாகதான் நேர்ல பார்க்கிறேன். இதுக்கு பிறகும் இந்த படத்தை நான் எடுக்க ஆரம்பிச்சா, அதன் முடிவு எங்கே கொண்டு போய் விடும்னு நல்லா தெரியுது. அதனால்…‘ கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தாராம் இருவரையும்.
படத்திற்கே ஜனகனமண….!