ஏன்? ஷங்கருக்கு காது இல்லையா?

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதெல்லாம் பழைய கதை. இப்போது அப்படியல்ல. யார் கதறினாலும் ஏனென்று கேட்க நாலு பேர் இருக்கிற மீடியா உலகம் வந்தாச்சு! ஒட்டுமொத்தமாக எல்லா மீடியாக்களும் அதை செய்தியாக்கிய பிறகும் ஷங்கர் மவுனம் காப்பது அறியாமையால் அல்ல. அதுக்கும் மேல!

ஐ படத்தில் திருநங்கைகளை கேலிப்பொருளாக சித்தரித்திருக்கிறார் ஷங்கர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்கிற சத்தியத்தை ஷங்கர் படித்திருக்கிறாரோ இல்லையோ? அவருக்கு அருகிலிருந்து அரவணைத்து காப்பாற்றிய எழுத்தாளர் சுஜாதா கூடவா அதை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்? அப்படியிருந்தும் இறைவனின் படைப்பில் பிழைச் சொல்லாகிவிட்ட திருநங்கைகளை கேவலமாக சித்தரித்திருப்பது தவறுதான். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக ஐ வெளிவந்த நாளில் இருந்தே அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும், தங்கள் ஆற்றாமையை கோபமாக வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும் அவர்களுக்காக ஒரு மன்னிப்பு கேட்க தோன்றவில்லையே ஷங்கருக்கு?

எந்த விஷயத்தையும், அது புண்ணாகி புரையோடிப் போகிற அளவுக்கு விட்டு பிடிப்பது தமிழ்சினிமாக்காரனின் சாபக்கேடு. லிங்கா விஷயத்தில் கூட விநியோகஸ்தர் சிங்காரவேலன் குரல் கொடுத்து அது மீடியாவில் வெளியான தினத்தன்றே அவரை அழைத்து பேசியிருந்தால் ரஜினியின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

இப்போதும் அப்படியொரு அலட்சிய போக்கில்தான் இருக்கிறார் ஷங்கர். தவறுதான்… உடனடியாக அந்த காட்சிகளை நீக்குகிறேன் என்று அவர் கூறியிருந்தால் இத்தனை காலம் சமூக அக்கறையோடு அவர் எடுத்த படங்களுக்கும் ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். ‘ஐயய்யோ… இப்படியெல்லாமா நடந்திருச்சு. என் கவனத்திற்கே வரலையே?’ என்று ஒரு வாரம் கழித்தோ இன்னும் பத்து நாள் கழித்தோ அவர் சொல்வாராயின் ஷங்கரின் புகழுக்கும் பெருமைக்கும் இதைவிட பெரிய இழுக்கு வேறொன்று இல்லை.

நேற்று கூட சென்சார் அலுவலகத்தில் குவிந்த திருநங்கைகளில் ஒருவர் மருத்துவப்படிப்பு படித்தவர். இன்னொருவர் பொறியாளர். அவ்வளவு ஏன்? ஐ படத்தில் நடித்திருக்கும் திருநங்கை ஓஜஸ் ராஜானி கூட இந்தியாவின் புகழ்பெற்ற மேக்கப்வுமன்தான். அவரது ஒரு நாள் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய் என்கிறார்கள். இப்படியெல்லாம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்காக போராடிக் கொண்டிருக்கும் இனம்தான் அது. வாய்ப்பில்லாதவர்கள் வழி நெடுகும் கையேந்துகிறார்கள்.

ஈகோவை விட்டுவிட்டு அந்த அப்பாவி இனத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேளுங்கள் ஷங்கர்.

Read previous post:
Sagaptham New Stills

Close