எல்லாருக்கும் பிடித்த நயன்தாரா ஏன் அவர்களுக்கு மட்டும் பிடிக்காமல் போனார்?
எப்போதாவதுதான் இப்படி மார்க்கெட் ‘களை’ கட்டும்! கலெக்ஷனும் சுளையாய் கொட்டும்! ஒன்று தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால், தியேட்டர்காரர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். குறைந்த விலைக்கு தியேட்டருக்கு தள்ளிவிட்டுவிட்டு, அதற்கப்புறம் அவர்கள் சம்பாதிப்பதை பார்த்து, ஐயோ போச்சே என்ற அலறுகிற தயாரிப்பாளர்களையும் சினிமா கண்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு துண்டு. விநியோகஸ்தருக்கு கோவணம். தியேட்டர்காரர்களுக்கு அது கூட இல்லை. டீ டோக்கன், பைக் டோக்கன் காரர்கள் இன்னும் சுத்தம் என்பது மாதிரி படங்களும் வரும்.
ஆனால் தலையிலிருந்து கால் வரைக்கும் நன்றாக சம்பாதித்து, சந்தோஷமாக ஒரு குரூப் ஸ்மைலுக்கு வழிவகுத்த படம் தனி ஒருவன். இதுவே வேறொரு தயாரிப்பாளருக்கு இப்படியொரு வெற்றி கிடைத்தால், கோடம்பாக்கத்தில் பந்தல் போட்டு, கோட்டூர்புரம் வரை மேளம் வாசித்திருப்பார். ஆனால் ஆயிரம் பேரை அழைத்து அன்னதானம் போட்டதோடு தன் சந்தோஷத்தை லாக் பண்ணி உள்ளே போட்டுவிட்டது ஏஜிஎஸ்.
அட… நமக்கு இப்படியொரு ஹிட்டு கிடைச்சிருக்கே? அதுக்காகவாவது சொந்த பணத்தை வாரியிறைச்சு பிரமாண்டமா ஒரு விழா எடுக்கலாமே என்றால், டைரக்டர் மோகன்ராஜா, ஆஃப் மோடில் இருக்கிறார். என்னதான் ஆச்சு இவர்களுக்கு?
இப்படியொரு விழா எடுத்தால் அதில் கலந்து கொள்ள நயன்தாராவை அழைக்க வேண்டும். (அவரும் வந்துட்டுதான் மறுவேலை பார்ப்பார்) ஆனால் தப்பித்தவறி வந்துவிட்டால் என்னாவது என்றுதான் இப்படியொரு விழாவை அவர்கள் எடுக்கவே இல்லையாம். அவர் வந்தால் என்ன நடக்கும்? அவரை கண்டு தனி ஒருவனை படைத்தவர்கள் ஏன் தத்தளிக்கிறார்கள்?
ஒரு மண்ணாங்கட்டியும் புரியல… ஆனா என்னவோ வில்லங்கம் இருக்கு!