‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!
சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை தள்ளிப் போட்டாராம். அந்த பிரமுகர் ஐ படத்தை வெளியிடுவதால் இந்த மிரட்டலாம். அடக்கடவுளே… இப்படியுமா கதையளப்பது?
சரி போகட்டும்… நிஜ காரணம் என்ன? ‘என்னை அறிந்தால்’ வட்டாரத்தில் விசாரித்தால், ‘தினம் ஒரு வதந்தி பரவி வருவதை நாங்களும் படிச்சுட்டு சிரிச்சுகிட்டுதான் இருக்கோம்’ என்கிறார்கள். ‘உண்மையில் நடந்ததே இதுதான்’ என்கிறார்கள் அவர்கள். பொதுவாகவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நின்று நிதானமாக வேலை பார்க்கிற டைப். இந்த முறை அவருக்கு அனேகன் படமும் சேர்ந்து கொண்டது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வேலை வாங்குவதால், எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்கிற குழப்பம் அவருக்கு. கடைசி நேரத்தில் அவர் மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் லண்டனில் ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருப்பதால், எல்லாரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கிளம்பிவிட்டார்கள் அங்கே’.
‘இந்த விடுமுறையே சுமார் ஒரு வார காலம் நேரத்தை கடத்தியதால், வேறு வழியில்லாமல் படத்தின் வெளியீட்டை தள்ளிப் போட வேண்டியதாயிற்று’ என்கிறார்கள் அவர்கள். 29 ந் தேதிதான் படம் ரிலீஸ் என்பதால், தான் எடுத்த காட்சிகளையே இன்றும் சிறப்பாக மெருகேற்ற வேண்டும் என்பதால், பேட்ச் வொர்க் என்று சொல்லப்படும் செய் நேர்த்தி காட்சிகளை கடந்த வாரம் வரைக்கும் கூட ஷுட் பண்ணியிருக்கிறார் கவுதம் மேனன்.
ஹாரிஸ் ஜெயராஜ் வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு இந்த முறை அனேகன், என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். கீழ் தளத்தில் ஒரு படமும், மேல் தளத்தில் ஒரு படமும் என்று இந்த பணியை ஓடி ஓடி செய்து கொண்டிருக்கிறார் ஹாரிஸ்.