பத்திரமா திரும்பி வந்துருய்யா…! ஜெயம் ரவி அப்பா பதறியது எதற்காக?
தோளுக்கு மேல் வளர்ந்தாலும், ஜெயம் ரவியை தொட்டில் பிள்ளையாகதான் டீல் பண்ணுகிறது அவரது பேமிலி. பெற்றோர் பேச்சு கேட்காத பிள்ளைகளெல்லாம் என்ன கதியாகிக் கிடக்கிறது என்பதை தினந்தோறும் செய்தித்தாள் படித்து அறிந்து கொள்கிற ஜெயம் ரவியும், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்றே நடை போட்டு வருகிறார். இப்பவும் அவருக்காக கதை கேட்பதும், முடிவு செய்வதும் அவரது அப்பா எடிட்டர் மோகன்தான்!
ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என்று மூன்று ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து, கட் அவுட்டுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார் ஜெயம் ரவி. தோல்வியை துப்பட்டா முனையில் துடைத்துக் கொள்வதும், வெற்றியை ஊரறிய முரசு கொட்டுவதும் நல்ல விஷயம்தானே? நேற்று தனது சந்தோஷத்தை பிரஸ்சுக்கு அறிவித்து கொண்டாடி மகிழ்ந்தது ஜெயம் ரவி குடும்பம். மாமனார், மனைவி, அண்ணன், அப்பா என்று சகல சவுபாக்கியங்களோடும் வந்திருந்த ஜெயம் ரவியின் கண்களில் சந்தோஷம் துள்ளி விளையாடியது. படம் பற்றி எல்லாரும் நிறைய பேசினார்கள். பிள்ளையை பற்றி நிறைவாக பேசினார் அப்பா.
“நான் இந்த படத்தில் வில்லனா நடிச்ச நாதன் ஜோன்ஸ் படங்களை பார்த்திருக்கேன். அவர் நிஜமாகவே ஒரு குத்து சண்டை வீரர் . பூலோகத்தில் அவர்தான் வில்லன்னு தெரிஞ்சதும் எனக்கு பயம் வந்திருச்சு. தினமும் ரவி ஷுட்டிங் கிளம்பும்போது, “தம்பி… ஜாக்கிரதையா திரும்பி வந்துருப்பா”ன்னு சொல்லிதான் அனுப்புவேன். அவர் அடிக்கும் போது கழுத்து திரும்பிடப் போவுதோன்னு ஒவ்வொரு நாளும் அச்சத்தோடுதான் போனது. நல்லவேளை… யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் இந்த படத்தை எடுத்த டைரக்டர் கல்யாணுக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்றார்.
இந்த ஹாட்ரிக், ஜெயம் ரவியின் மார்க்கெட்டில் படு ஸ்டிராங்கான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. “முன்னைவிட கவனமா படங்கள் பண்ணணும்னு புரியுது” என்கிறார்.
உங்களின் அடுத்தடுத்த படத் தகவல்களை பார்த்தால், அப்படி தெரியலையே பிரதர்!