இப்படி பண்ணிட்டீங்களே ஷங்கர்?

லட்சம் தடவை ஒளிபரப்பான பாடலாக இருந்தாலும், ஷங்கரின் பட பாடல்கள் டி.வியில் வந்தால் சுற்றம் சூழ கண்டு களிக்கிற வழக்கத்தை இப்போதும் கொண்டிருக்கின்றன தமிழ் நெஞ்சங்கள். படத்திற்கு காட்டுகிற அக்கறையை விட பாடல்களுக்கும், அதற்கான காட்சிகளுக்கும் காட்டுகிறவர் டைரக்டர் ஷங்கர். அதுமட்டுமல்ல, டான்ஸ் மாஸ்டர்களின் டங்குவாரை அறுத்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. முன் வரிசையில் மட்டும் மூக்கும் முழியுமாக டான்சர்களை நிற்க வைத்துவிட்டு அடுத்த வரிசையில் ஆயாக்களை நிறுத்தி ஆட வைத்து, அதை பார்க்கிற ரசிகனுக்கும் ஆடுகிற ஆயாவுக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சுவலி வரவழைக்கிற டான்ஸ் மாஸ்டர்களின் சீன், ஷங்கரிடம் ஒருபோதும் எடுபட்டதில்லை.

நாளைக்கு ஷுட்டிங் என்றால், இன்றே அதில் ஆடப்போகும் பெண்களையும் ஆண்களையும் நேரில் கொண்டு வந்து ஷங்கரிடம் காட்ட வேண்டும். அவர் டிக் அடித்தால்தான் அவர்கள் ஸ்கிரினுக்கு வர முடியும். இப்படியெல்லாம் கடுகு பொறிவதிலிருந்து, காரத்தை பிழிகிற வரைக்கும் பார்த்து பார்த்து சமையல் செய்கிறவர் ஷங்கர். அப்படி பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்த ஷங்கர் படத்தில்தான் பின்வரும் கொடுமை!

எந்திரன் 2 அதாவது 2.O படத்தில் ஒரு பாடல்தான் இடம் பெறுகிறதாம். முழுக்க முழுக்க சண்டைக்காட்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

ஷங்கர் படம் என்றால் விரும்பி காத்திருக்கும் பாட்டு ரசிகர்களுக்கு அந்த வகையில் ஏமாற்றம்தான் வரப்போகிறது. பேலன்ஸ் பண்ணிருங்க ஷங்கர்.

Read previous post:
Evanda Movie Gallery

Close