ரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்! அதற்கப்புறமும் ஏன் ரஞ்சித்?

சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி!

ரஜினியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தால் கூட அதுவே என் உயிர், பொருள், ஆவி என்று ரசிகர்கள் திரிந்த காலம் அது. நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், தம்மடிச்சா ஸ்டைல், தலை கோதுனா ஸ்டைல் என்று தமிழ்நாட்டு இளைஞர்களை பித்து பிடித்து அலைய வைத்துக் கொண்டிருந்தார் அவர். அந்த நேரத்தில்தான் அவரது மனசு ஆன்மீகத்தில் தன் முதல் வலது காலை நுழைத்தது. ஹரே ராமா… ஹரே கிருஷ்ணா என்றொரு கடவுள் பக்த அமைப்பு ஒன்று சென்னையில் இயங்கி வந்தது. திடீரென அதன்மீது காதல் கொண்ட ரஜினி, தொடர்ந்து அங்கு சென்று அந்த பஜன்களில் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ஹரே ராமா இயக்கத்துடன் அப்படியே செட்டில் ஆகிவிடுவது என்று முடிவெடுத்து, “நான் சினிமாவிலிருந்து விலகி, ஆன்மீகவாதியாகப் போகிறேன்” என்று அறிக்கை விட்டார்.

அவ்வளவுதான்… கிழிந்தது கிருஷ்ணகிரி. சம்பந்தப்பட்ட ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மடத்தில் புகுந்த ரசிகர்கள், “ஒழுங்கு மரியாதையா தமிழ்நாட்டை விட்டே ஓடிப் போயிருங்க” என்று அவர்களை விரட்டிவிட்டு, ரஜினியை மீட்டு வந்தார்கள். அதற்கப்புறம் ராகவேந்திரர் மீது பற்றுதலாகி தனது 100 வது படத்தை ‘ராகவேந்திரா’ என்ற பெயரில் தயாரித்து நடித்தார் ரஜினி. அவரிடம் ஸ்டைலை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஐயோ பாவம்… நாலைந்து துளசி இலைகளை மென்று விட்டு சோகத்தோடு நடையை கட்ட வேண்டியிருந்தது. ராகவேந்திரா என்ற கடவுளின் பெயரில் அவர் நடித்த அந்த படம் படுபிளாப் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?

அதற்கப்புறமும் ரஜினியின் மவுசு கூடிக் கொண்டே போனதே தவிர குறையவில்லை. கடவுள் பெயரில் அவர் நடித்த ‘பாபா’ படத்தின் நிலைமை இன்றும் காலத்தால் அழிக்க முடியாத கலைச்சோகம்! பாபா படப்பெட்டியை வாங்க விநியோகஸ்தர்கள் ஏலம் எடுத்துச் சென்றார்கள். ஆனால் படம் வெளியான ரெண்டாவது நாளே, பொட்டியை அப்படியே பெருமாள் கோவிலில் உள்ளே போட்டுவிடலாமா என்கிற அளவுக்கு போனது நிலைமை.

அதற்கப்புறம் ரஜினியின் வாழ்வில் பெரும் சூறைக்காற்று வீசியது கோச்சடையான் என்ற கடவுளின் பெயர் கொண்ட படத்தில்தான். மோஷன் பிக்சர் என்ற முறையில் எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும், அந்த படத்தால் ரஜினி குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் இன்னும் அடைந்தபாடில்லை. இறுதியாக வந்த லிங்காவும் கடவுளின் பெயர் கொண்ட படம்தான். லிங்கேஸ்வரன் பட்ட துன்பத்தைதான் நாடே துயரத்தோடு கவனித்துக் கொண்டிருந்ததே….!

ரஜினி படங்களில் கடவுள் பெயர் கொண்ட தலைப்புகள் படுத்திய பாட்டை கடந்த காலங்கள் தெள்ளந்தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பா.ரஞ்சித் இயக்கப் போகும் ரஜினியின் படத்தின் கண்ணபிரான், காளி, கபாலி என்றெல்லாம் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். அதிலும் இறுதியாக சொல்லப்படும் கபாலி என்பதன் பெயர் காரணம் என்னவாம்? படத்தில் ரஜினியின் பெயர் கபாலீஸ்வரனாம். அதனால்தான் கபாலி!

எல்லாத்துக்கும் வரலாறு ரொம்ப முக்கியம் ரஞ்சித்! ஒரு தமிழ் படத்திற்கு பெயர் வைப்பதா கஷ்டம்? அதிலும் ரஜினி படத்திற்கெல்லாம் ரஜினி என்றே பெயர் வைத்தால் கூட போதுமே!

Read previous post:
கருப்பு பூனைக்கு ஆசைப்படும் கல்லா நிரம்பாத நடிகர்கள்!

‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால்...

Close