திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படத்தை தயாரிக்கும் அதே நண்பர் ராஜாவுடன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் சிவகார்த்திகேயன்.

யெஸ்… சிவா நடிக்க, ராஜா தயாரிக்க அப்படத்தை இயக்கப் போவது மோகன் ராஜா. ‘தனியொருவன்’ புகழ் ராஜா என்றால் தையத்தக்கா என்று சந்தோஷப்படுவீர்கள். ஏன் இவ்வளவு அவசரமாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டும்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்!

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கி சட்டை’. ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தன் அடுத்த படத்திற்கான இடைவெளியை இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளக் கூடாதுதான். அவர் என்ன செய்வார்? பல்வேறு சிக்கல்களில் சிக்கி, நூல் எது? நூலின் முனை எது என்று புரியாமல் தேங்கி நிற்கிறது அதற்கப்புறம் வர வேண்டிய ‘ரஜினி முருகன்’. எல்லா பஞ்சாயத்துகளும் முடிந்து கடந்த 4 ந் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். மழை, வெள்ளம் காரணமாக மறுபடியும் தள்ளிப் போய்விட்டது. இதற்கிடையில் அவரை ஏழு கோடி கேட்டு மிரட்டிய விநியோகஸ்தர் ஒருவர், தானே படம் தயாரிக்க ஆசைப்பட்டாராம். ஏற்கனவே படங்கள் தயாரித்திருந்தாலும், இந்த முறை அவர் குறி வைத்தது சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை என்கிறார்கள்.

முக்காலியோ, சிம்மாசனோ? அது நம்ம வீட்ல செஞ்சதா இருக்கட்டும் என்ற முடிவுக்கு சிவகார்த்திகேயன் வந்து வெகு நாளாச்சு. அதன் காரணமாக தன் கால்ஷீட் டைரி இன்னும் ஒரு வருஷத்துக்கு புல்லா இருக்கு என்பதை சொல்வதற்காகவே இந்த படத்தை முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள். தனியொருவன் படத்தின் தன்னிகரில்லா வெற்றியும், சிவகார்த்திகேயனின் அசுர பல ரசிகர்களும் சேர்ந்தால், அந்த படத்தை ஆன் டேபிள் பிசினஸ் செய்து கொள்ளதான் ஆயிரம் பேர் விருப்பப்படுவார்களே?

அதற்கப்புறம் ஏன் அந்த பைனான்சியர் தொந்தரவு கொடுக்கப் போகிறார்? அரசியலுக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் கூட அரசியல் தேவைப்படுகிறதே பெருமாளு…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஈட்டி விமர்சனம்

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்?...

Close