வைகோவை சூரி சந்தித்தது ஏன்? பின்னணியில் நடந்தது இதுதான்!

‘சீமானை பார்த்தார், வைகோவை பார்த்தார்…எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னேற்றத்துக்குதான்’ என்று பொடி வைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஊர். “ஏம்ப்பா வளர்ந்து பெரிய இடத்தை புடிச்சுட்ட இந்த நேரத்துல உனக்கு அரசியல் ஆசை வரலாமா? தேவையா?” என்றெல்லாம் நள்ளிரவு போன்கள் நச்சரிக்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே” என்று சொல்லி சொல்லியே சுளுக்கு விழுந்திருச்சு சூரியோட நாக்கு! வேறொன்றுமில்லை, சூரியை வாழ்த்தி சீமான் கொடுத்த ஒரு அறிக்கையும், வைகோ சூரியை பாராட்டியதும்தான் இவ்வளவு பூகம்பத்திற்கும் காரணம். சூரிதான் சும்மாயிருந்தாரா? கட்சிக்கொரு தளபதி என தேடி தேடி சந்திக்க ஆரம்பித்துவிட்டார். கடைசியாக அவர் சந்தித்து வாழ்த்து பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசுவை!

நிஜமாகவே சூரிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா? சுற்றம்… நடந்தது என்ன?

இந்த பிரச்சனைக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட ‘கத்துக்குட்டி’ பட இயக்குனர் இரா.சரவணனுக்கே போன் அடித்து விளக்கம் கேட்டோம். ஏனென்றால் சூரி லீட் ரோலில் நடிக்கும் ‘கத்துக்குட்டி’ படத்திற்காக எட்டு பிட் போஸ்ட்டர் அடித்தார் இரா.சரவணன். அதில் சூரியின் படம் மட்டும்தான். படத்தில் பங்கு பெற்ற வேறு எவர் தலையும் இல்லை. இந்த போஸ்டர் சென்னை நகரம் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. அதில் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்துதான் வரிசையாக சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல கிளம்பினார்கள் அரசியல் தலைவர்களும், அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும்.

“என்னோட ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரிக்கு பெரிய ரோல். அவரது பிறந்த நாளும் நெருங்கி வந்ததால் அவருக்கு ஒரு போஸ்டர் அடிக்க பிரியப்பட்டேன். படத்தின் ஹீரோ நரேனுக்கு போன் செய்து, “நான் சூரி படத்தை மட்டும் போட்டு போஸ்டர் அடிக்கப் போறேன். உங்க படத்தை போடலேன்னு நினைக்காதீங்க. இது சூரி ஸ்பெஷல்”னு சொன்னேன். அவர் பெருந்தன்மையோட, “ஆகட்டும் சார். அதுக்கென்ன” என்றார். சீமானிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சூரியின் பிறந்த நாள் பற்றியும் பேச்சு வந்தது. “வேற யாராவது ஹீரோவுக்கு பிறந்த நாள்னா சினிமா இன்டஸ்ரியே திரண்டு போய் வாழ்த்து சொல்லுது. சூரி நம்ம மண்ணின் கலைஞன். இந்நேரம் அவன் வீட்டில் எல்லா நட்சத்திரங்களும் கூடி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டாமா? அவனுக்கு நான் நேரா வந்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லணும் தம்பி”ன்னு கிளம்பிட்டார்“.

“பதறிப்போன சூரி, ஐயோ… அண்ணன் என்னை தேடி வர வேணாம். நான் வர்றேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கப்புறம் இருவரும் சந்தித்தார்கள். தனது பிறந்த நாள் வாழ்த்தை சூரிக்கு சொல்லி சந்தோஷப்பட்டார் சீமான். அதுதான் நடந்தது”.

“இது ஒருபுறமிருக்க, கத்துக்குட்டி படத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை ஒன்றை பற்றியும் பேசியிருக்கிறோம். அதற்காக கருத்து கேட்கும் நோக்கத்தில் வைகோவுக்கு இந்த படத்தை பிரத்யேகமாக திரையிட்டிருந்தோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த வைகோ, “படம் ஒரு காவியம் போல இருக்கிறதே’’ என்று வியந்தார். “ஹீரோ நரேனும், சூரியும் அற்புதமா நடிச்சுருக்காங்க. நான் அவங்களை பார்க்கணுமே” என்றார். நரேன் வெளியூரில் இருந்தார். ஆனால் சூரி சென்னையில்தான் இருந்தார். உடனே வைகோ, ‘அவரை பார்க்க அவர் வீட்டுக்கே செல்வோம்’ என்று கிளம்ப, பதறிப் போன சூரி அவரே ஓடிவந்து வைகோவை சந்தித்தார். இதுதான் நடந்தது. அதற்குள் இதற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள்”. என்றார்.

இது ஒருபுறமிருக்க, சூரியும் சீமானும் நிற்கும் படத்தை வினைல் போர்டாக அடித்து ஆங்காங்கே வைத்துவிட்டார்கள். ஆர்வ மிகுதியால் வினைல் வைத்த அண்ணன்களுக்கு போன் அடித்த சூரி, நீங்க வினைல் போர்டு வச்சுருந்த இடத்திலெல்லாம் ஒரு காலத்தில் சோறு இல்லாமல் சுருண்டு விழுந்து கிடந்திருக்கேன். எனக்கு அதுதான் ஞாபகத்துக்கு வருது. அதனால் அந்த போர்டை எடுத்துர்றீங்களா? என்றாராம் கெஞ்சலாக.

எப்படியோ… சும்மா போன சூரியை வம்பில் இழுத்து விட்டுவிட்டது அவரது பிறந்த நாள். ஹேப்பி பர்த் டே யூ சூரி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாராவா? டி.ராஜேந்தரா? யார் பக்கம் நிற்கும் நடிகர் சங்கம்?

பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன... விட்டுப்போன... படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த...

Close