சிறையில் அம்மா … அதிர்ச்சியில் ஜீவாவின் ‘ யான் ’
மற்ற சேனல்களை விட கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா பிரமோஷன் விஷயத்துல பின்னிருவாங்க பின்னி… அதனால படம் அவங்களுக்குதான்! என்று ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் முதல் தர மார்க் போட்டு கம்மி விலைக்கு படத்தை தள்ளவும் தயாராக இருப்பார்கள் பல தயாரிப்பாளர்கள். அந்த சேனல் எது என்பதை நாம் சொல்ல தேவையில்லை. இந்நேரம் புரிந்திருக்கும்…
அதே நேரத்தில் வேறொரு சமாதானமும் இங்கே உண்டு. ‘அவங்களே கேட்டுட்டாங்க. கொடுக்கலேன்னா குண்டக்க மண்டக்க ஆகிரும்’ என்று வேறொரு சேனலுக்கு படத்தை கொடுக்கவும் துணிவார்கள் சில தயாரிப்பாளர்கள். இவ்விரண்டு சேனலும் இல்லாமல் ஆங்கில எழுத்தின் கடைசி சேனல் ஒன்று இருக்கிறது. இங்கு போனால் துட்டு நிறைய தருவார்கள் என்ற நம்பிக்கையோடு முதலில் படத்தை அவர்களுக்கு தள்ளிவிட துடிக்கும் தயாரிப்பாளர்களும் இங்கே நிறைய… இப்படி சேனல் உலகத்தின் கோணல்மாணல் கொள்கைகளுக்கு வளைந்தும் நெளிந்தும் வாழ பழகிவிட்டார்கள் பல தயாரிப்பாளர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், ஒரு சேனலுக்கு நீங்கள் படத்தை விற்று விட்டால் மற்ற சேனல் காரர்கள் சம்பந்தப்பட்ட படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் சங்கு ஊதிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். இருந்தாலும், வேறு வழியில்லாமல் ஆடிக்காற்றில் வாழையை வளர்த்த மாதிரி படத்தை வளர்த்து பந்தியும் வைத்துவிடுகிறது தயாரிப்பாளர்களின் பெரு முயற்சி.
சரி நேரடியாக விஷயத்திற்கு வருவோம். ஜீவா நடித்த யான் திரைப்படம் அக்டோபர் 2 ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. ரிலீஸ் தினத்தன்று தடபுடலாக இந்த படத்தை விளம்பரம் செய்துவிடும் நோக்கத்தில் முன் கூட்டியே ஜீவா, துளசி, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் படக்குழுவினருடன் இன்டர்வியூ எடுத்தார்களாம். திட்டமிட்டபடி அது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.
ஆனால் மக்கள் முதல்வர் என்று அதிமுக வினரால் மரியாதையோடு அழைக்கப்படும் ஜெ. தற்போது சிறையில் இருப்பதால், ஜெயா தொலைக்காட்சியில் கொண்டாட்டமான காட்சிகளுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுவிட்டதாம். அதனால் யான் குழுவினர் சற்றே கிலியடித்துப் போயிருக்கிறார்கள்.
மற்ற விஷயத்திலாவது ‘எங்களுக்கு யான்?’னு போயிருக்கலாம். ஆனால் அம்மா விஷயத்தில் முடியாதே!