யாமிருக்க பயமே / விமர்சனம்

‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து!

தமிழில் வரும் அநேக பில்லி சூனிய பேய் பிசாசு படங்கள் எல்லாமே நமது பிராணனை வாங்குகிற மாதிரி ஒரே ஸ்டீரியோ டைப்பில்தான் இருக்கும். யாமிருக்க பயமே-வும் அப்படியொரு சாயலில் அமைந்த படமாகதான் இருக்கப் போகிறது என்கிற அசால்ட் மனப்போக்குடன் அமர்ந்தால், ஆவியை விட்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார் அறிமுக இயக்குனர் டி.கே. முதல் படத்திலேயே ஓ.கே லெவலையும் தாண்டிவிட்டார் இந்த டி.கே! என்னவொரு சரளமான நகைச்சுவை!

‘வயோதிக வாலிப அன்பர்களுக்கு…’ டைப்பில் ஒரு டி.வி புரோக்ராம் செய்யும் கிருஷ்ணா, அதில் பாதிக்கப்பட்ட மகாநதி சங்கரிடம் செம மாத்து வாங்குகிறார். அவரது ஏமாளி மகனிடம் நாற்பது லட்சத்தை சுருட்டிக் கொண்டு காதலி மஞ்சரியுடன் எஸ்கேப் ஆகும் இவர் போய் லேண்ட் ஆவது, தனது பூர்வீக சொத்தாக இருக்கும் ஒரு பங்களாவில். அதை இடித்து திருத்தி ஓட்டலாக்கிவிட்டால், செம துட்டு பார்க்கலாம் என்பது ஐடியா. நினைத்தபடி எல்லாம் நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. தங்க வருகிற கஸ்டமரெல்லாம் வரிசையாக செத்துப் போகிறார்கள். போலீசுக்கு தெரியாமல் அவர்களை அள்ளிப் போட்டு மூடி வைத்தால், அடுத்தடுத்த சில நாட்களில் அவர்களின் பிணம் எதுவும் குழியில் இல்லை. என்னடா இது என்று தவிக்கும் கிருஷ்ணாவுக்கு தெரிகிற உண்மைகள் அத்தனையையும் நான் ஸ்டாப் காமெடி.

அதற்காக பேய் படம் என்று போக்கு காட்டிவிட்டு மிரட்டாமல் விட்டால் எப்படி? சொரெர் என்று அடி வயிற்றில் புஸ்வாணம் வைக்கிற காட்சிகளும் ஆங்காங்கே இருப்பதால், ரசிகர்கள் கூட்டமாக போவது உத்தமம். பயத்தில் கட்டிப்பிடித்துக் கொள்ள வசதியான ஜோடியோடு போவது போவது இன்னும் உத்தமம்.

கிருஷ்ணா பெரிய நடிகர் இல்லைதான். ஆனால் அவரது கதை தேர்வு சென்ஸ் வெகு சீக்கிரம் அவரை அந்த லெவலுக்கு கொண்டு போகக் கூடும். அவ்வளவு சீரியசான காட்சிகளில் கூட, வெகு ஜம்பமாக ஒரு ஜோக் அடித்து, அதை தியேட்டருக்கு கன்வே செய்கிற வித்தை வெகு அசால்ட்டாக வருகிறது கிருஷ்ணாவுக்கு. ரூபா மஞ்சரி மட்டும் என்னவாம்? இவரது முகத்தை பார்த்ததாலேயே ஒருவன் வாந்தியெடுக்கிறான் என்பதையெல்லாம் சகித்துக் கொள்ளவதற்கு ஒரு மனசு வேண்டும். அது அவரிடம் நிறைய இருக்கிறது. ஆனால் மஞ்சரியின் வாயிலிருந்து வரும் சில டயலாக்குகள் அப்பட்டமான டபுள் மீனிங்ஸ். பொண்ணு புரிஞ்சு பேசுச்சா, இல்லே… தமிழ் புரியா கோளாறா? அந்த வெண்ணிறாடை மூர்த்தி வகையறாக்களுக்கே வெளிச்சம்.

ஓவியாவை உரித்து தொங்க விட்டிருக்கிறார் டைரக்டர். அந்த அரையிருட்டும், ஓவியாவின் உபரி தரிசனங்களும் பசங்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கும் வித்தைகளில் ஒன்று.

‘சூது கவ்வும்’ பட புகழ் கருணாகரனுக்கு இதில் மெயின் ரோல். ச்சும்மா ஊதி தள்ளுகிறார் மனுஷன். எப்படியாவது தங்கை ஓவியாவை கிருஷ்ணா தலையில் கட்டிவிட வேண்டும் என்று அவர் போடும் தந்திரங்களும், ஒரு கட்டத்தில் அவரே பேயாய் மாறி போடும் கூச்சல்களும் படத்தை வினாடி வேகத்தில் நகர்த்துகிறது. இவரது பிளாஷ்பேக்கில் வரும் அந்த பன்னிவாய் ஆசாமி குலுங்கடிக்கிறார் தியேட்டரை. அவ்வப்போது திகில் மூட்டுவதற்காகவே அழுக்கு மூட்டையாக திரியும் நளினிகாந்த்தும், உறக்கத்தில் நடக்கிற வியாதியோடு திரியும் கருணாகரனும் ஒரு பெட்டில் படுத்துக் கிடக்கிற காட்சியில் சிரிப்பும் திகிலும் ஒரே நேரத்தில் பொங்கி வருவதை அடக்கவே முடியவில்லை.

இவ்வளவு சிரிப்பையும் அடக்க முடியாமல் அமர்ந்திருக்கும் வேளையில் மயில்சாமியையும் உள்ளே இறக்கிவிட்டு ‘முடிஞ்சா தப்பிச்சுக்கோங்க’ என்கிறார் டைரக்டர். ஹைய்யோ… அவர் போர்ஷன் ஒரு தனி குபீர் மேளா! பேய் உச்சகட்டத்தில் ஆடுகிற வேளையில் இவர் ஒரு போட்டோவை அதனிடம் காட்டுகிற காட்சியில் சிரிக்காமல் கூட இருக்க முடியுமா என்ன?

படத்தில் ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா ஜோடியின் பாடல் ஒன்றும் அது படமாக்கப்பட்ட விதமும் கவிதை. ஆனால் அந்த பிளாஷ்பேக்? அந்த பங்களா? அந்த திருப்பம்? எல்லாமேதான் படத்தின் மைய முடிச்சு. அதுதான் நம்முடைய தைரிய முடிச்சையும் தாறுமாறாக பிய்த்தெறிகிறது.

இப்படியொரு க்ளைமாக்ஸ் எந்த பேய் படத்திலும் இருந்திருக்க முடியாது. அந்த கடைசி சொட்டு காட்சியிலும் கூட, ‘தொரண்ணே… அதுக்குள்ளேவா?’ என்றொரு டயலாக்கை போட்டு மொத்த கூட்டத்தையும் வயிறு குலுக்கி அனுப்புகிறார் டைரக்டர் டி.கே.

இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு அரையிருட்டு காட்சி மிரட்டலும், அதிரடி பின்னணி மியூசிக்கும் அவசியமோ அவசியம். அதை கன கச்சிதமாக கையாண்டிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ராமியும், இசையமைப்பாளர் எஸ்,என்.பிரசாந்தும்.

இவ்வளவு உற்சாகமான குதுகலமான ஆவிப்படத்தில் எதற்காக அத்தனை டபுள் மீனிங் வசனங்கள்? கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமே டிகே?

யாமிருக்க பயமே… பேயிருந்தும் சிரிப்பே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அனுஷ்கா காஜல் ஹன்சிகா தமன்னா! இப்படியெல்லாமா பிரச்சனை வரும்?

எங்களை தவிர யாரையும் பயன்படுத்தக் கூடாது என்று பெப்ஸி அமைப்புக்குள் இருக்கும் எல்லா சங்கங்களும் தயாரிப்பாளரின் தாவங்கட்டைய நசுக்கி வருவது காலம் காலமாக நடந்து வருகிற விஷயம்தான்....

Close