யட்சன் – விமர்சனம்

‘யட்சன்’ என்றால் இயக்குபவன் என்று அர்த்தமாம்! இவ்வளவு பழசான வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து தலைப்பாக வைத்திருக்கும் நம்ம விஷ்ணுயட்சனின் ட்ரீட்மென்ட் என்ன? அதை காண்பதற்கு படு குஷியுடனும் பேரார்வத்துடனும் தியேட்டருக்குள் குவிந்திருப்பார்கள் ஆர்யாவின் ரசிகர்கள். விஷ்ணுயட்சனின் தம்பி கிருஷ்ணாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், ஐகான் என்னவோ… நம்ம ஆர்யாதான்!

இரண்டு ஊர்களிலிருந்து இரண்டு வித நோக்கத்தோடு சென்னை வரும் ஆர்யா, மற்றும் கிருஷ்ணாவுக்கு ஒரே இடத்தில் ஒரு பிக்கப்! ஆனால் வண்டி மாறி ஏறிவிடுகிறார்கள் இருவரும். இப்படி விதி என்ற யட்சனின் கைகளில் சிக்கும் இருவரும் என்னவானார்கள்? இதுதான் ரெண்டு வரி நாட்! அதை தாட்பூட்டென்று அவசர கதியில் சொல்லி முடிக்காமல் ஆற அமர சொல்லி முடிக்கிறார் டைரக்டர். சில இடங்களில் வேகம். சில இடங்களில் விவேகம். ஆக மொத்தத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோ கையில் அருவாமனையை கொடுத்த எபெக்ட்!

ஆர்யாவின் அறிமுகம் ஒரு அடிதடியில் ஆரம்பிக்கிறது. மாறுவேடத்தில் வந்து மருந்தடிக்கிற அளவுக்கு அடித்துப் பொளக்கும் ஆர்யா, அதற்கப்புறம் நார்மல் கெட்டப்புக்கு வந்து சம்பந்தப்பட்ட அடியாட்களையே கிராஸ் பண்ணிவிட்டு போகும் காட்சி நன்றாகதான் இருக்கிறது. ஆனால் அவர் செய்யும் ஒரு சீரியஸ் கொலைக்கான காரணம், ரொம்ம்ம்ப சுமார். அதென்ன? கடன் வாங்கி அஜீத் படத்திற்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறாராம். அதை வில்லன் கோஷ்டி கிழித்துவிடுகிறதாம். அதனால் ஒருவனை ஒரே போடாக போட அவன் மர்கயா. கொலைகார கோஷ்டி கொன்று போட்ட ஆர்யாவை சல்லடை போட்டுத்தேட, பார்ட்டி சென்னைக்கு பேக்கப். படம் முழுக்க அஜீத் அஜீத் என்று சராசரி ரசிகனை விடவும் பலமாக உருகுகிறார் ஆர்யா. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போவது உறுதி என்றாலும், இப்படியா அடுத்தவர் பணத்தில் சாம்பிராணி போடுவது?

ஆர்யாவின் கெட்டப், அடி உதை எல்லாமே ரசிக்கும் ரகம். அதிலும் அஜீத்தை நேர்ல பார்ப்போமா என்று தவியாய் தவிக்கும் அவரை அஜீத்துக்கே தம்பியாக நடிக்க வைத்தால்? முகமே பொங்குமாங்கடல் ஆகிறது ஆர்யாவுக்கு. கத்தியை கீழே போட்டுவிட்டு நடிகராகிவிட வேண்டும் என்ற தவிப்பையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார் ஆர்யா. கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்திருப்பது பெஸ்டிலும் பெஸ்ட்!

சந்தேகம் என்னவென்றால் ஆறாவது மாசத்திலேயே எழுந்து நடந்தவராக இருந்திருப்பாரோ இந்த கிருஷ்ணா? நில் என்றால் ஓடுவார் போலிருக்கிறது. ஓடு என்றால் பறப்பார் போலிருக்கிறது. (எப்பவும் கேரக்டருக்குள்ள அடங்க பழகுங்க தம்பி) இருப்பினும் இவருக்கும் ஸ்வாதிக்குமான எபிசோட் மனசு நிறைஞ்ச கவிதை! “அடிச்சியாம்ல? மன்னிப்பு கேளு…’ என்று வருங்கால மாமனாரிடமே காதலனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்வாதி படம் முழுக்க அதே கெத்தோடு நெஞ்சம் நிமிர்த்தி கைத்தட்டல் பெறுகிறார்.

ஒரு கொலை செய்ய திட்டமிடும் ஆர்யாவும், ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பும் கிருஷ்ணாவும் கார் மாறி ஏறிவிடுவது ரசிகர்களுக்கு தெரிந்த பின்பு, அதன் முடிவை தேடி ஆவல் பறப்பதை தடுக்க முடியவில்லை. இவர் போன இடத்திலும் அவர் போன இடத்திலும் நடக்கும் திருப்பங்களும் செம! ஆனால் அதே பரபரப்போடு நகர வேண்டிய திரைக்கதை, திடீரென்று விசு படம் பார்ப்பதை போல வேறு திசைக்கு செல்லும்போதுதான் ‘ஐயே’வாகிறது தியேட்டர்.

பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே கணிக்கிற ஆற்றல் கொண்ட தீபாசன்னதி, மெல்ல மெல்ல ஆர்யாவிடம் காதல் வயப்படுவதை கவிதையாக சொல்லியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஒன் சைட் லவ்வாக திரியும் ஆர்.ஜே.பாலாஜி அவரது வழக்கமான லொட லொடப்பையும் மறந்து சிரிக்க வைக்கிறார். இன்னொருபுறம் தம்பி ராமய்யாவும் சேர்ந்து கொள்ள, ஆங்காங்கே கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது படம்.

வில்லன் அதுல் ஹுசைன் சும்மா பார்த்தாலே மிரள வைக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. நிஜ வில்லன் யாரென்று அறிகையில் டபுள் திகைப்பு.

யுவன்சங்கர்ராஜாவின் எக்ஸ்ட்ரா இசை காலம் இது. ரெண்டு பாடல் தேறினால் அதிர்ஷ்டம். இந்த படத்திற்கு அந்த அதிர்ஷ்டம் மிஞ்சியிருக்கிறது. பின்னணி இசை தேவலாம்.

ஆர்யா வருகிற காட்சிகள் எல்லாம் சிவப்பு டோன்! கிருஷ்ணா வருகிற காட்சிகள் எல்லாம் நீல டோன்! இந்த வித்தியாசம் படத்திற்கு என்ன மாதிரியாக உதவியிருக்கிறது என்ற கேள்விக்கெல்லாம் போகத் தேவையில்லை. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் ஈர்ப்பு!

யட்சன்? விஷ்ணுவர்த்தனின் உச்சமும் இல்லை. மிச்சமும் இல்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஸ்ட்ராபெர்ரி- விமர்சனம்

‘ம்ஹும்... இனியொரு ஆவிப்படத்தை தாங்குறதுக்கு என் மனசுல தெம்பில்ல’ என்று ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆவியை மையமாக...

Close