மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பியது ராதிகாதான்! இளம் டைரக்டர் கொந்தளிப்பு

ஒரு இடைத்தேர்தலின் பரபரப்பு கூட இந்தளவுக்கு இருக்குமா தெரியாது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகத்தை அனலாக்கிக் கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல் குறித்த முஸ்தீபுகள். கல்யாணம் மற்றும் காதுகுத்து விழாக்களில் கூட அரசியல் பேசுவதுதான் அரசியல்வாதிகளின் யுக்தி. அந்த யுக்தியை ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா பயன்படுத்த அதே மேடையில் அதற்கு பதிலடியும் கிடைத்தது. அப்படியொரு பதிலடியை கொடுத்தவர் இங்கிருக்கும் தமிழ் நடிகரோ நடிகையோ அல்ல. தெலுங்கில் 500 படங்களுக்கு மேல் நடித்த சூப்பர் ஸ்டார் மோகன்பாபு.

நடிகை ஜெயப்ரதாவை பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’ என்று ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்வில் இப்போதுதான் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். அதுவும் அவரது தாய்மொழியான தெலுங்கில் தயாரிக்காமல் நேரடியாக தமிழில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் ‘உயிரே உயிரே’. விஷால், நயன்தாரா நடித்த சத்யம் திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். ஜெயப்ரதாவின் தங்கை மகன் சித்து இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார்.

வெறும் நடிகை மட்டுமல்ல, வடக்கேயுள்ள முக்கிய தலைவர்களில் ஒருவரான அமர்சிங் கட்சியில் ஜெயப்ரதா முக்கிய பிரமுகர்! முன்னாள் எம்.பியும் கூட. அந்த பழக்கத்தில் அமர்சிங், பிரபல இந்தி நடிகர் அனில்கபூர், தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் ரஜினியின் வாடா போடா நண்பருமான மோகன்பாபு, மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட மேடை அது. மும்பையில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த ஹன்சிகா, இந்த நிகழ்ச்சிக்காகவே பிளைட் பிடித்து ஓடோடி வந்திருந்தார். அதே மேடையில் நடிகை ஸ்ரீப்ரியா, கன்னட நடிகை சுமலதா அம்பரீஷ் ஆகியோரும் இருந்தார்கள்.

பொதுவாகவே இதுபோன்ற திரைப்பட விழாக்களுக்கு வருகிற பிரமுகர்கள் படத்தின் பாடல் காட்சிகள் பற்றியோ, அல்லது படத்தின் இயக்குனர் ஒளிப்பதிவாளர் பற்றியோ, அல்லது படம் குறித்த மற்ற விஷயங்கள் பற்றியோ பேசிவிட்டுதான் ஏதாவது பிரச்சனையை கிளப்புவார்கள். மறுநாள் பத்திரிகையில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே எகிடு தகிடாக பேசுகிற சினிமா பிரமுகர்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படியொரு மேடையாக இந்த மேடை இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அமர்சிங், அனில்கபூர், மோகன்பாபுவுக்கெல்லாம் இந்த ‘டெக்னிக்’ தெரியாது என்ற பத்திரிகையாளர்களின் நம்பிக்கை, ராதிகா பேச வந்ததும் முற்றிலும் மாறிப் போனது. சம்பிரதாயத்திற்கு கூட அவர் ‘உயிரே உயிரே’ படத்தை பற்றியோ, திரையிடப்பட்ட பாடல் காட்சியை பற்றியோ பேசவில்லை.

‘ஜெய்ப்ரதா போல அன்றைய தென்னகத்தில் சிவப்பழகி யாரும் இல்லை. ஜெயப்ரதாவுக்கு பிறகு சிவப்பழகியாக இருப்பவர் ஹன்சிகாதான்’ என்று வர்ணித்த தெலுங்கு பிரமுகர் சுப்பராமரெட்டியை கோபித்துக் கொள்வதிலிருந்து துவங்கியது அவர் பேச்சு. அப்படியே மெல்ல டிராக் மாறி தற்போதிருக்கும் இளைய தலைமுறை நடிகர் நடிகைகளை ஒரு பிடி பிடித்தார். “இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக கலந்து கொள்கிறோம். கீழே படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

சற்று முன் அங்கு திரையிடப்பட்ட நான்கு பாடல்கள் பற்றியோ, ட்ரெய்லர் பற்றியோ பேசிவிட்டு ராதிகா இப்படி பேசியிருந்தால் கூட அது பெரிய விஷயமாக இருந்திருக்காது. அவர் வந்ததே இப்படி பேசுவதற்காகதானோ என்கிற எண்ணத்தை தானாகவே உருவாக்கிவிட்டது நிலைமை. சீனியர் நடிகையான ராதிகா, இந்த நிகழ்ச்சியின் முதல் நாள்தான் பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். அதுவும் வாழ்நாள் சாதனையாளர் விருது. அப்படியொரு பெருமைக்குரியவர், எப்படி இவ்வளவு சுயநலமாக நடந்து கொண்டார் என்று விழா அரங்கத்திலிருந்தவர்கள் முணுமுணுத்தது தனி.

ராதிகாவின் பேச்சுக்கு அதே மேடையில் பதில் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னாலேயே பேச வந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு, ‘இங்கு எல்லாரும் நிறத்தை பற்றி பேசினாங்க. நிறம் மேலயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல. தோல் வெள்ளையா இருக்காங்கறது முக்கியமில்ல. மனசு வெள்ளையா இருக்கணும்’ என்றார். அப்படியே தமிழ் மக்களின் மனசு எப்படிப்பட்டது என்பதை அவர் சொல்ல சொல்ல அரங்கத்தில் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.

‘நான் நடிக்க வந்த புதிதில் பாண்டி பஜார்ல பசியும் பட்டினியுமா வாழ்ந்திருக்கேன். முடியாத நேரத்தில் எந்த கடையில் போய் கடன் கேட்டாலும் கொடுப்பாங்க. ஆனால் ஆந்திராவுல சினிமாக்காரன் கடன் கேட்டா கொடுக்க மாட்டாங்க. அப்பவும் சரி. இப்பவும் சரி. அதுதான் நடக்குது. அந்த வகையில் நான் தமிழ்நாட்டை வணங்குறேன். இப்படி சொல்வதற்கு நான் பயப்பட மாட்டேன். ஏன்னா நான் மனுஷங்களுக்கு அஞ்சுறவன் இல்ல. கடவுளுக்கு மட்டும்தான் பயப்படுவேன். எனக்கு தாய்பால் ஊட்டுனது தமிழ்நாடு. அதற்கப்புறம் சோறு போட்டு வாழ வச்சதுதான் ஆந்திரா’ என்றார் போல்டாக! அதற்கப்புறம்தான் ராதிகாவின் பேச்சு பற்றி திரும்பியது அவர் கவனம். ‘ராதிகா சொன்னதுல எனக்கு சம்மதமில்ல. அப்ப நாமல்லாம் ஒரு டீம் ஆக இருந்தோம்ங்கறது சரிதான். ஆனால் இப்ப அப்படியில்லேன்னு சொல்ல முடியாது. எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களும் இதே சினிமாவுலதான் இருக்காங்க. எல்லாரோடும் நல்லா பழகுறாங்க. நம்ம காலம் முடிஞ்சுருச்சு. அடுத்த தலைமுறை வந்தாச்சு. நாமதான் அவங்களுக்கு வழி கொடுத்துட்டு ஒதுங்கிக்கணும்’ என்றார் வெளிப்படையாக.

அச்த மேடையில் இப்படியொரு சர்ச்சை எழுந்தது பற்றி ‘உயிரே உயிரே’ படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.ராஜசேகரிடம் பேசினோம்-

‘ராதிகா சரத்குமார் மேடம் பேசுனது அவங்க சொந்த கருத்து. அதில் எனக்கு உடன்பாடு இல்ல. இந்த விழாவில் விஷாலை மனதில் வைத்துக் கொண்டு விமர்சிப்பதுதான் அவங்க நோக்கமாக இருந்திருக்கணும். இல்லேன்னா இங்கே அவங்க பேசியதை முதல் நாள் இரவு நடந்த பிலிம்பேர் விழாவிலேயே பேசியிருக்கலாமே?

‘அவங்க சொல்வது மாதிரியில்ல இப்ப இருக்கிற யங் ஜனரேஷன். விக்ராந்த் என்ற நண்பனுக்காக விஷால், ஆர்யா, ஜெயம்ரவியெல்லாம் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கறது இப்பதானே? பார்த்திபன் சார் இயக்கிய கதை திரைக்கதை வசனம் படத்துல ஏழு பெரிய ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் நடிச்சுக் கொடுத்தாங்களே… அது ராதிகா ஹீரோயினா நடிச்ச காலத்தில் நடந்திருக்கா? சிம்பு நடிக்கிற படத்தை தனுஷ் தயாரிக்கிறார். அந்தளவுக்கு இன்னைக்கு இளம் தலைமுறை ரொம்ப பக்குவமாகவும் ஒற்றுமையாகவும்தான் இருக்கு. கார்த்திக் ஒரு கதை கேட்டு அது தனக்கு பொருத்தமா இல்லேன்னா, ஆர்யாவுக்கு போன் போட்டு அந்த கதையை கேட்க வைக்கிறார். மனசை இளம் தலைமுறை நடிகர்கள் விசாலமா வச்சுருக்காங்க. நடிகர் சங்க பிரச்சனையை மறைமுகமாக பேசுவதற்காக எங்க மேடையை பயன்படுத்தியிருக்கிறார் ராதிகா. இது ரொம்ப அநாகரீகமானது.

மல்லாந்து படுத்து எச்சில் துப்பியது அவர் சொன்ன மாதிரி இளம் நடிகர்கள் அல்ல. ராதிகாதான். எப்படி தெரியுமா? அந்த விழாவுக்கு பாலிவுட்லேர்ந்து உச்ச நட்சத்திரமான அனில்கபூர் தமிழகத்தில் நடக்கும் ஒருவிழாவுக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். எல்லாரும் அவர் பேச்சை கேட்க ஆர்வமா இருக்கிற நேரத்தில், அவர் நேரத்தையும் இவர் எடுத்துக் கொண்டு, அவருக்கு முன்னாலேயே நம்ம தமிழ்நாட்டு நட்சத்திரங்களை அசிங்கப்படுத்துறது நம்ம மேல நாமளே எச்சில் துப்பிக்கறதுக்கு சமமானதுதானே? அவர்தான் நம்ம இன்டஸ்ட்ரி பற்றி என்ன நினைச்சுட்டு போயிருப்பார்?

ஒரு இயக்குனரா என்னோட கோரிக்கை என்னன்னா ஒரு திரைப்பட விழா என்பது அந்த படத்தின் பப்ளிசிட்டிக்காகவும் வியாபாரத்திற்காகவும் பெரும் பொருட் செலவில் செய்யப்படுவது. அதில் வாழ்த்துவதற்கு சில சீனியர்களை கூப்பிட்டால், ராதிகா சரத்குமாரை போல சுய விளம்பரத்திற்காகவும் சுய பிரச்சாரத்திற்காகவும் அந்த மேடையை மாற்றிக் கொள்வது பல மேடைகளில் நடக்கிறது. இது அந்த தயாரிப்பாளரை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. அது போல பக்குவமில்லாத மனநிலையில் இருக்கும் சீனியர்கள் இது போன்ற விழாக்களுக்கு வராமலிருப்பதே நல்லது என்றார் ஆவேசமாக!

-அபிஷேக்
நன்றி – குமுதம் ரிப்போர்ட்டர்

1 Comment
  1. sandy says

    இந்தம்மா வாணி ராணி நாடகத்துல பேச வேண்டியதை இங்க வந்து பேசிக்கிட்டு இருக்குயா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் தந்த ஆச்சர்யம்! திக்குமுக்காடிய அப்புக்குட்டி என்கிற சிவபாலன்

யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய...

Close