ஏன் வரவில்லை யுவன்? சிறுபடங்கள் என்றால் அலட்சியமா?
இன்று சென்னையில் நடந்த ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா, அப்படத்தின் இசையமைப்பாளர் இல்லாமல் நடந்ததே இல்லை. அந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்திருக்கிறார் யுவன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆகட்டும், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகட்டும். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் படத்தின் இசை வெளியீடு என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். இது போன்ற விழாவில் பேசுகிற விஐபிகளும், ‘இந்த படத்தின் ஹீரோ யாரா வேணும்னாலும் இருக்கட்டும். இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர்தான்’ என்று அவரை பற்றி நாலு வரி பேசாமல் அகலுவதில்லை. ஆனால் இன்று யுவன் இல்லாமலே அவர் புகழ் பாடப்பட்டது. நல்ல ட்யூன்கள்தான் அதற்கு காரணம் என்றாலும், யுவன் செய்தது சரியா? என்ற கேள்வியோடு நகர்ந்தார்கள் விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள்.
அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். எஸ்.பி.பி.சரண் தயாரித்திருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இன்று அவருக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யூவுக்கு ஒரு பாடலுக்கு ஆட சம்மத்திருக்கிறார் என்றால், இந்த படக்குழுவுக்கும் அவருக்கும் இடையே இருக்கிற அன்பு புலப்படும். போகட்டும்… வேறென்ன விசேஷம்?
அப்பவும் விசேஷம் யுவன்தான். எஸ்.பி.பி சரண் தயாரித்த ஆரண்ய காண்டம் படத்திற்கும் இவர்தான் மியூசிக். அந்த படத்திற்காக போடப்பட்ட பாடல் ஒன்றை படத்தில் பயன்படுத்த முடியவில்லையாம். இந்த படத்தில் அதை பொருத்தமாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்புறமென்ன? யுவனின் வேலையை குறைத்துவிட்டார் சரண். அதை அப்படியே எடுத்து இந்த படத்தில் செருகிவிட்டார். இன்று திரையிடப்பட்ட அந்த பாடல், இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் என்றால், நம்பிதான் ஆக வேண்டும். ட்யூன் அப்படி.
சரி… ஏன் வரவில்லையாம் யுவன்? அஞ்சான் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலையில் இருக்கிறாராம். அதனால்தான்!
அட்டக்கத்தி தினேஷும், ஒரிஜனல் கத்தி சூர்யாவும் வேற வேறதானே என்பதால் இருக்குமோ?