ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி என்னால முடியாது! யுவன்ஷங்கர் ராஜா அமர்க்களமான பதில்

தள்ளி தள்ளிப்போன நெல்லை அமர்க்களம் மே மாதம் நடந்துவிடும் போலிருக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடப்பதாக சில முறை சொல்லி அது கடைசி நேரத்தில் கேன்சல் ஆனதால், ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டே கலைந்ததை நாம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில் புதுயுகம் சேனல் சார்பாக நடைபெறும் அந்த நிகழ்ச்சி மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட யுவனிடம் வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டது மீடியா. எல்லாவற்றும் சளைக்காமல் பதில் சொன்னார் அவரும்.

பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு ஆண்கள் கப்சிப் ஆகிவிடுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக யுவன் எல்லா கேள்விகளுக்கும் சிக்சரும் ஃபோருமாக அடித்துக் கொண்டிருந்தார். பேச்சில் கரைபுரண்டது சந்தோஷம். ‘என் கல்யாணத்துக்கு அப்பாவால வர முடியலங்கறது வருத்தம்தான், இருந்தாலும் கடைசி நேரத்தில் முடிவு பண்ணிய விஷயம் அந்த கல்யாணம். இனிமேலும் தள்ளிப் போட வேண்டாம்னு முடிவு பண்ணினோம். அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னப்போ, என்னால திடீர்னு வர முடியாது. கல்யாணத்தை முடிச்சுட்டு நேரா இங்க வா என்றார். வந்தோம். ஆசிவாதம் பண்ணினார். மற்றபடி நான் மதம் மாறுன விஷயத்தில் கூட அப்பா எதிர்ப்பு காட்டல’ என்றார்.

‘ஏன் முன்பு போல அதிக படங்களுக்கு மியூசிக் பண்றதில்ல?’ என்ற கேள்விக்கு யுவன் சொன்ன பதிலை அப்படியே இயக்குனர் சங்கத்திற்கு ஃபார்வேர்டு பண்ண வேண்டியதுதான். ‘கதை சொல்ல வருவாங்க. இந்த பாட்டை ரொம்ப டிபரண்ட்டா போட்டுக் கொடுங்கன்னு கேட்பாங்க. சரி சுச்சுவேஷன் சொல்லுங்கன்னா, ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றாங்க. அந்த இடத்துல இந்த பாட்டுன்னு சொல்வாங்க. சரி… நெக்ஸ்ட் வேற ஒருத்தர் வருவாரு. சார்… ரொம்ப வித்தியாசமா ஒரு ட்யூன் போட்டுக் கொடுங்கன்னு கேட்பாரு. சரி சுச்சுவேஷன் சொல்லுங்கன்னா ஹீரோ, ஹீரோயின்ட்ட லவ் சொல்றாரு. அந்த இடத்துல இந்த பாட்டு வரணும்னு சொல்வாங்க. இப்படியே போயிட்டு இருந்தா எப்படின்னு நான்தான் படம் பண்றதை குறைச்சுகிட்டேன்’ என்ற யுவனை இடைமறித்து, ‘உங்க அப்பா இளையராஜாவும் இதே மாதிரி சுச்சுவேஷனுக்கு பாடல்கள் போட்டுதான் ஆயிரம் படத்தை தாண்டிட்டாரு. நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்களே?’ என்றது மீடியா.

‘அதுதான் அப்பா… ’ என்றார் யுவன் சந்தோஷமாக.

திலீப் குமார் ஏ.ஆர்.ரஹ்மானாக மதம் மாறினார். டைட்டிலிலும் ஏ.ஆர்.ரஹ்மான் என்று போட்டுக் கொண்டார். ஆனால் நீங்க இன்னமும் அப்துல் ஹாலிக் என்ற உங்க பெயரை டைட்டிலில் பயன்படுத்தாம, யுவன்ஷங்கர்னு பயன்படுத்துறீங்களே? என்ற கேள்விக்கு, நச்சென பதில் வந்தது யுவனிடமிருந்து.

அவர் முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மான்னுதான் அறிமுகமானார். ஆனால் நான் இத்தனை படங்கள் பண்ணிட்டேன். திடீர்னு அப்துல் ஹாலிக்குன்னு மாத்துனா அது ரசிகர்களுக்கு குழப்பம் வரவழைக்கும். அதனால்தான் இப்படியே தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பட்… இன்ஷா அல்லா. என் மனசுக்குள் நான் அப்துல்ஹாலிக்கா முழுமையா இருக்கேன் என்றார்.

உங்க அப்பா படத்திற்கு வர்ற மியூசிக் ராயல்டி பிரச்சனை உங்களுக்கு வர்றதில்லையே? அந்த பிரச்சனைக்கு காரணம் மியூசிக் நிறுவனங்கதானா என்ற இன்னொரு கேள்விக்கு ஆற அமர பதில் சொன்னார் யுவன்.

அவர் காலத்துல கேசட், எல்.பிதான் இருந்திச்சு. அதுக்கு மட்டும்தான் அவர் ரைட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் காலம் மாற மாற வேற புது புது டெக்னாலஜி வந்துருச்சு. அதனால் அவருடைய முந்தைய அக்ரிமென்ட்டுகளில் பிரச்சனை. இப்போதான் அவர் கேஸ்ல விண் பண்ணிட்டாரே? எனக்கு அந்த பிரச்சனை இல்ல. ஏன்னா என் காலத்துல வர்ற எல்லா டெக்னாலஜியும் என் பாடலுக்கான ராயல்டிக்கு உட்பட்டதுதானே?

யுவன் அவ்வளவு பேசுவாரா என்று இருந்ததுதான் இந்த பிரஸ்மீட்டின் ஹைலைட்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வலியவன் – விமர்சனம்

புடிச்ச ஃபிகரு ‘அட்றா...’ன்னா புரூஸ்லீக்கே கூட புத்தூர் கட்டு போட்ருவானுங்க நம்ம பசங்க! இதையே மையமா வச்சு ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன். ‘எங்கேயோ...

Close