தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு… புள்ளைய பெத்தா கண்ணீரு…’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ, அவர்களையெல்லாம் தேடி தேடி கவனிக்கிறார் யுவன். இப்படி இடம் பொருள் ஏவல் தெரியாமல் யுவன் நடந்து கொள்வதை நினைத்து ராஜா கவலைப்படுகிறாரோ, இல்லையோ? ராஜாவுக்காக மற்றவர்களை கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார் யுவன்.

வைரமுத்துவின் நிழல் பட்டால் கூட, கங்கையிலே குளிக்கிற அளவுக்கு ஆறாத ரணத்திலிருக்கிறார் இளையராஜா. ஆனால் ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்திற்காக வைரமுத்துவை பாடல் எழுத வைத்திருக்கிறார் யுவன். இந்த சம்பவத்தையும் அதை தொடர்ந்த விமர்சனங்களையும் இப்போதுதான் மறந்திருக்கிறது உலகம். இப்படத்தின் டைரக்டர் சீனு ராமசாமி, வைரமுத்துவின் வரிகளில் இளையராஜாவை பாட வைப்பேன் என்று கூறிய ஒரு வார்த்தை, இளையராஜாவை சீண்டிவிட, அவரே முன் வந்து ‘அதெல்லாம் சும்மா, சீனு ராமசாமியா, யார் அது?’ என்று விளக்கம் அளிக்கிற அளவுக்கு தள்ளிவிட்டார்கள் சீனுவும் யுவனும்.

அந்த புகை மூட்டம் இன்னும் கூட ஓயவில்லை. அதற்குள் மற்றொருவரை தனது ஆர்மோனிய பொட்டியிருக்கும் அறைக்கு வரவழைத்து இளையராஜாவை வெறுப்பேற்ற இருக்கிறார் யுவன். கிராமத்து ராஜா பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்தால், அது இசையுலகத்தின் திருவிழாதான். ஆனால் அதற்கெல்லாம் இனி இடமில்லை என்று ஒதுங்கிவிட்டார் இளையராஜா. ‘காலம் மாறிப் போச்சுய்யா. ரசனையும் மாறிப் போச்சு. இனி நாங்க ஒண்ணு சேர்ந்தா கூட பழைய பாட்டு மாதிரி வருமா, தெரியாது’ என்று பாரதிராஜாவும் நட்புக்கும் நல்ல இசைக்கும் நாமம் போட்டுவிட்டார். இளையராஜா மட்டும் சளைத்தவரா? பாரதிராஜா கலந்து கொள்ளும் விழாக்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன், அவரது நட்பையே முன்னாள் நட்பாக மூட்டை கட்டி பரணில் ஏற்றிவிட்டார்.

இந்த நிலையில்தான் பாரதிராஜாவுடன் யுவனின் கொஞ்சல் குலாவல்! விரைவில் பாரதிராஜா இயக்கி அவரே நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு யுவன்தான் இசையமைக்கிறார். இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதற்காக பெற்ற அப்பாவுடைய மனசையுமா அறியாது?

Read previous post:
தம்பி கார்த்தி படம்… டென்ஷனோடு பார்த்த சூர்யா! ரிசல்ட் என்னவாம்?

‘அஞ்சான்’ தந்த உள் காயத்திற்கு ‘மெட்ராஸ்’ மருந்து போட்டிருக்கிறது! இப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த சம்பவத்தை. முதல் மூன்று நாள் கலெக்ஷனே முப்பது கோடி, படத்தை...

Close