நெடுஞ்சாலை ஷிவேதாவை பிடித்திருப்பது பேயுமல்ல, பிசாசுமல்ல, அது வேற…! ஜீரோ பட இயக்குனர் விளக்கம்
‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவேதா, ‘அச்சு அசலாக நயன்தாரா மாதிரியே இருக்கிறாரப்பா…’ என்று அந்த படம் வந்த புதுசில் பாராட்டிய உள்ளங்களுக்கு ‘அவருக்குள்ளும் ஒரு பேய் இருக்கிறாள்’ என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் அறிமுக இயக்குனர் வி.அருண்குமார். இவர் இயக்கி வரும் ‘ஜீரோ’ படத்தில் ஷிவேதாவை பிரபஞ்ச சக்தி ஒன்று பிடித்து ஆட்டுகிறதாம். அதிலிருந்து அவரை ஷிவேதாவின் ஆசை கணவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் ஜீரோ படத்தின் ஒன் லைன்.
பேயாச்சு… பிசாசாச்சு… ஆவியாச்சு… அண்டமாச்சு…என்று மனுஷனை அதட்டி வைக்கவும் ஆயிரமாயிரம் விஷயங்கள் இங்கு இருக்கும் போது, வி.அருண்குமாருக்கு படம் எடுக்க ஒரு விஷயம் கிடைக்காமலா போய்விடும்? இவர் படத்தில் வந்து மிரட்டப் போவது உலகம் தோன்றிய போது தோன்றிய கெட்ட சக்தியாம். கடவுள் படைக்கும் போதே கெட்ட சக்தியையும் நல்ல சக்தியையும்தான் படைக்கிறார். மனுஷங்க எப்படி கெட்டவங்களா ஆகுறாங்களோ, அப்போ அந்த கெட்ட சக்தியை ஏவி விடுவதுதான் அவரோட வேலை என்று தனியாக ஒரு திரைக்கதை போடுகிறார் நம்மிடம். (ம்ம்… இதுவும் கேட்க நல்லாதான் இருக்கு)
மங்காத்தா, இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா படத்தில் நடித்த அஸ்வின் ஷிவேதாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மரியான் பட இயக்குனர் பரத்பாலாவிடம் பணியாற்றியவர் இந்த வி.அருண்குமார். ஏகப்பட்ட கிராபிக்ஸ் சமாச்சாரங்களுடன் மிரட்ட கிளம்பியிருக்கிறது இந்த டீம்.
அதற்காக ஷிவேதாவை கோரமா காட்டுவீங்களா? என்ற அதி முக்கியமான கேள்வியை அருண்குமாரிடம் கேட்டால், ‘அந்த அழகை எப்படிங்க சிதைக்கறது? அதனால் அவங்க அவங்களாவே வர்றாங்க. பதற்றம் வேண்டாம்’ என்றார். பேசிக்கலாக அருண்குமார் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளராம். ஐடி படிச்சிருந்தாலும், இராம.நாராயணன் பாலிஸிதான் கை கொடுக்குது! இல்லீங்களா இன்ஜினியரே….