24- விமர்சனம்

லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே… பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள்! படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில் நுட்பமும், திருவின் ஒளிப்பதிவும் ‘வச்ச கண்’ வாங்காமல் பார்க்க வைக்கிறது.

அதற்கப்புறம் சூர்யா! ஒரு பாட்டில் தேனுக்கு நாலு கிலோ சர்க்கரை இலவசம் என்றால் எப்படியிருக்கும்? அப்படி மூன்று சூர்யாக்கள்! திகட்ட திகட்ட வருகிறார். தித்திப்பும் திகைப்புமாக மிரட்டுகிறார். கரணம் தப்பினால், கர்ணம் என்பது மாதிரியான கதை. அதை மண்டை கிறுகிறுக்க விடாமல் சொல்வதே பெரும்பாடு. ஆங்காங்கே லேசாக தலை சுற்ற வைத்தாலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் விக்ரம் குமார்.

கை கடிகாரம் ஒன்றை கால எந்திரமாக கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி சூர்யா. அதை அவரது அண்ணனான இன்னொரு சூர்யா அபகரிக்க முயல்கிறார். ரயிலில் குழந்தையுடன் தப்பிக்கும் விஞ்ஞானியை அங்கு வைத்தே தீர்த்துக்கட்ட முனையும் வில்லன் சூர்யா, அந்த கொடூரத்தில் ஈடுபட, அதே ரயிலில் வரும் சரண்யாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மர்கயா ஆகிறார் விஞ்ஞானி. கொல்ல வந்த சூர்யாவும் கோமாவுக்கு போய்விட, கால் நூற்றாண்டுக்கு பிறகும் கதை தொடர்கிறது. கால எந்திரத்தின் முள்ளை நகர்த்தி, வில்லனைக் கொன்று, மீண்டும் உயிரோடு வருகிறார் விஞ்ஞானி.  இவ்வளவையும் காட்சிப்படுத்தியதில் இருக்கிறது பிரமாண்டமும் வியப்பும்,

ஆடியன்ஸ் அவங்கவங்க வயசுக்கேற்ப ரசிச்சுங்கங்கப்பா… என்று மூன்று வித கெட்டப்புகளில் வருகிறார் சூர்யா. அதில் சமந்தாவை காதலிக்கும் வாட்ச் ரிப்பேர் சூர்யா யூத்துகளின் ஏரியாவில் நின்று விளாசுகிறார். ஆனால் அடிக்கடி “வாட்ச் மெக்கானிக்குக்கு இதெல்லாம் சாதாரணங்க..’’ சொல்லி சொல்லியே சோம்பலாக்குகிறார் நம்மை. அவ்ளோ பெரிய அற்புதம் ஒன்று கையில் கிடைச்சிருக்கே? அதை வேற பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்தலாமல்லவா? பாதி நேரம் லவ்வுக்கே ஜவ்வாகிறது அதன் பணியும் பயனும்! ஆனால் ஒன்று. சமந்தா சூர்யா ஜோடி, பொருத்தமான ஜாடி!

கொஞ்சமே வந்தாலும், மனசெல்லாம் நிரம்பியிருக்கிறார் நித்யா மேனன்.

வில்லன் சூர்யா மிரட்டலோ மிரட்டல். மனுஷனை மறுபடியும் நினைத்தாலே நடுக்கம் வரும். கடைசியில் இவரது மரணத்தை இவ்வளவு சிம்பிளாக முடித்திருக்க வேண்டுமா? கதற கதற ஒரு பைட் வைத்திருக்கலாமோ என்று தோன்றாமலில்லை. பட்… கால எந்திரத்தின் மூலம் முப்பது வினாடிகள் உலகத்தை நிறுத்தி நிதானமாக சுட்டுக் கொல்லும் அந்த காட்சி… வாவ்!

அந்த வாட்சின் அற்புதத்தை எடுத்துச் சொல்ல டைரக்டர் நினைத்திருக்கும் சில காட்சிகள் கைதட்டல் ரகம். ஒரு காட்சி கவித கவித… மழையை நிறுத்தி அந்த துளியை தட்டிவிடும் சூர்யாவுக்கும் அந்த கிராபிக்ஸ் அற்புதத்திற்கும் ஒரு சேர ஒரு ஆஹா.

அதான் மற்ற எல்லாரும் அவங்கவங்க வேலையை ஒழுங்கா பார்த்துட்டாங்களே… நாம கொஞ்சம் ஓ.பி. அடிப்போம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் நினைத்திருப்பதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய ஷாக். பாடல்களில் சில ஏற்கனவே கேட்ட ரகம். பின்னணி இசையிலும் பெரிதான மெனக்கெடல்கள் இல்லை.

ஒளிப்பதிவாளர் திரு மட்டுமே இந்த படத்தின் ஹீரோ என்றால் சூர்யாவே கோபித்துக் கொள்ள மாட்டார்.

இந்த படத்தின் முடிவு நல்லதோ, கெட்டதோ, எதுவாக இருந்தாலும், “எல்லாம் சூர்யாவின் ‘நேரம்’டா” என்று கடந்து போய்விட வேண்டியதுதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

24 Movie ReviewARRahmancameraman ThiruNithya MenonsamanthaSlidesuryaTime Machine StoryVFXVikramkumarwatch
Comments (0)
Add Comment