குற்றமே தண்டனை விமர்சனம்

காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே கதையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது. அதற்கப்புறம் படம் முடிகிற வரைக்கும் ஆவென்று வாய் பிளக்கிறோம். உள்ளே போன ஈ வாய்க்குள் ஒரு தாஜ்மஹாலே கட்டினால் கூட தெரியாதளவுக்கு ‘இன்வால்வ்’ ஆக வைக்கிறது மணியனாரின் திரைக்கதை சூட்சுமம்! கூடவோ குறையவோ இல்லாமல் மின்சாரத்தை சீராக்கிக் கொடுக்குமே, ரெகுலேட்டர்! அதை திரைக்குள் பொறுத்தி வைத்த அழகோடு இம்மியளவும் இறங்காத விறுவிறுப்போடு நம்மை கூட்டிச் செல்கிறது படம்.

பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதை கவனிக்கிறார் விதார்த். அந்த நேரத்தில் அங்கு பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கும் ரகுமான், “இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே. எவ்ளோ பணம் வேண்டும்?” என்கிறார். அடுத்தடுத்த ரகசிய சந்திப்புகளில் மூன்று, ஐந்து என்று லட்சங்களில் கறக்கும் விதார்த், அவ்வளவு பணத்தையும் தன் கண் பார்வை குறைபாட்டுக்காக இறைக்கிறார். நடுவில் இவரை விசாரிக்கும் போலீசிடம், அதே நேரத்தில் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து போன இன்னொரு இளைஞனை காட்டுகிறார் விதார்த். அந்த கொலைக்கு சாட்சியாகவே மாறிவிடும் இவரால், தவறே செய்யாத அந்த இளைஞன் சிறைக்குப் போக, நிஜமான கொலைக்கு காரணம் ரகுமானும் இல்லை. வேறு யார்? என்ற கோணத்தில் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணிக்கிறது படம். முடிவு? பகீர்!

படத்தில் வருகிற அவ்வளவு பேரும், ஏதோ இந்த படத்தில் நடிப்பதற்காகவே பிறந்த மாதிரியிருக்கிறார்கள்! அதிலும் விதார்த்தின் நடிப்பு… துல்லியமோ துல்லியம்! கொஞ்சம் கொஞ்சமாக தன் கண் பார்வை சுருங்கிக் கொண்டே வர, அதை யாருக்கும் தெரியாமல் சமாளித்து வாழும் விதார்த் ஒவ்வொரு காட்சியிலும் அதை நமக்கும் உணர்த்தி பதற வைக்கிறார். குறிப்பாக சாலையை அவர் கிராஸ் செய்யும்போதெல்லாம் நமக்கு திடுதிடுக்கிறது ஹார்ட். விதார்த் பைக் ஓட்டுகிற மிக நீண்ட காட்சியில் கூட, தனது நோயின் வலியை தியேட்டருக்குள் கடத்துகிறார் மனுஷன். கிரேட்… விதார்த்துக்கு இது வாழ்நாள் சாதனை படம்தான்!

கண் பார்வை முற்றிலும் காலியாவதற்குள், ஆஸ்பிடலுக்கு பணம் கட்டிவிட வேண்டும் என்று அவர் துடிக்க, ஒவ்வொரு முறை இவர் ஆஸ்பிடலுக்கு செல்லும் போதும், அங்கு ரேட்டை அவர்கள் ஏற்றிக் கொண்டே போக, “அடப்பாவிகளா?” என்று ஒட்டுமொத்த சொசைட்டியையும் கூட, நிற்க வைத்து வெளுக்கத் தோன்றுகிறது.

ரோஜா செடியை தொட்டியே மறைத்த மாதிரி, அவ்வப்போது திரையில் முகம் காட்டுகிற ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சில விநாடிகளுக்குள் ஒரு பர்பாமென்ஸ் கொடுத்து அசரடிக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் காட்ட மாட்டார்களா? என்ற ஏங்க வைத்து, அந்த ஏக்கம் முடிவதற்குள்ளேயே அவரை நிரந்தரமாக தூங்கவும் வைக்கிறார் டைரக்டர்.

படத்தில் ஸ்கோர் பண்ணியிருக்கும் இன்னொரு பெண், பூஜா தேவாரியா! வழிச்சு சீவப்பட்ட தலை. நீண்ட தாடை. அப்பழுக்கில்லாத சிரிப்பு என்று கிராமத்து அழகை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். கோடம்பாக்கத்தில் மணிகண்டன்கள் வரவர, இவரை போன்ற மெழுகு நடிகைகள் கூட, ஷோபா போல தன்னை செதுக்கிக் கொள்வார்கள் என்பதற்கு பூஜாவே முதல் உதாரணம்!

எலிப்பொறிக்குள் கையை விட்ட கதையாக, கொலைப்பழியில் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் தொழிலதிபர் ரகுமான் ‘விட்டால் போதும்’ என்று கொட்டியழுகிற காட்சிகளில், அவ்வளவு பாந்தமாக ஒத்துழைக்கிறது அவரது முகம். செல்வந்தனின் ஜென்ட்டில்மேனிசம், ஒரு கட்டத்தில் கோபமாக வெளிப்பட்டாலும், செய்வதேது?

தனிமையிலிருக்கிற பணக்கார பெரிய மனுஷர்கள் பொழுதுபோக்குக்கு ஒருவனை பிடித்து வைத்து பேசுவார்கள் இல்லையா? அதிலும் ஒரு ‘தகப்பனிசத்தை’ குழைத்து கொடுக்கிற நாசரின் கேரக்டர், வித்தியாசமான பர்சனாலிடிதான்! இஸ்திரி கடை ஆயாவிலிருந்து, வசூல் ஆபிஸ் இன்சார்ஜ் வரைக்கும் அளவு குறையாமல் நடித்திருக்கிறார்கள்.

ஜோக்கரின் ஹீரோ, சோமசுந்தரத்திற்கு இதில் ஜஸ்ட் லைக்… வந்துவிட்டு போகிற வேஷம். அந்த சில நிமிஷங்களில் கூட அசரடித்திருக்கிறார் அவர்.

படத்தின் இசை இளையராஜா. பாடல்கள் தேவையில்லை என்று அவரே சொல்லியிருக்கக்கூடும். பின்னணி இசையில், பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஒரு சேர போட்டுத் தாக்குகின்றன அவரது இசைக்கருவிகள். சமயங்களில் மவுனத்தையும்!

இயக்குனர் மணிகண்டனே இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால், இயக்குனருக்கு வாகாக ஒளிப்பதிவாளரும், ஒளிப்பதிவாளருக்கு வாகாக இயக்குனரும் உழைத்திருக்கிறார்கள். விதார்த்தின் கண் பிரச்சனை, நமக்குள் இறங்கினாலொழிய இந்தப்படத்தை நம்மால் முழுமையாக ரசித்திருக்க முடியாது. அந்தக் கடமையை முழுமையாக செய்திருக்கிறது ஒளிப்பதிவு.

நல்ல சினிமா விரும்பிகள், இந்த படத்தை இன்னும் பார்க்காமலிருப்பதுதான் தண்டனைக்குரிய குற்றம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

To listen the audio click below :-

https://www.youtube.com/watch?v=IZfLIJhwEIs&feature=youtu.be

 

Aishwarya RajeshGuru SomasundaramilayarajaKakkamuttai ManikandanKutramey Thandanai ReviewKuttrameThandanai reviewManikandanNazzerPooja DevariyaRahumanVidaathvitharth
Comments (0)
Add Comment