இருள் சூழ்ந்த வானம்? லிங்குசாமிக்கு நம்பிக்கை தந்த ஜெயம் ரவி அப்பா!

வழுக்கிவிட்டது என்னவோ வாழைப்பழம்தானே என்கிற பொசிஷனில் இல்லை லிங்குசாமி. சற்று ஆழமான பள்ளம்தான். சினிமாவில் ஒரேயடியாக ஒழிந்துவிடுவார்கள் என்று கணக்கு போட்ட பலரும் அசுர பலத்தோடு எழுந்து வந்து மீண்டும் ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்தான். லிங்குசாமியும் அப்படியொரு வேகத்தோடு மீள்வார். அது வேறு… ஆனால்?

லிங்குசாமியை நாலா பக்கத்திலிருந்தும் நசுக்கிக் கொண்டிருக்கிறது யதார்த்தம். இந்த நேரத்தில் சினிமாவில் டாப் பொசிஷனில் இருக்கும் அவருடைய நண்பர்கள் கை கொடுத்தாலே அவர் மீண்டு விடலாம். சூர்யாவின் சிங்கம் 3 படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கேட்டுப் பார்த்தாராம். அல்லது சதுரங்க வேட்டை பட இயக்குனரிடம் கதை கேட்டீர்களே, அதற்கான கால்ஷீட்டையாவது உடனே தாருங்கள் என்றாராம். கார்த்தியின் பையா 2 ஐ ஆரம்பிக்கலாம் என்றாராம். அவ்வளவு ஏன்? எப்பவோ அஜீத்தை வைத்து இயக்கினாரல்லவா? அந்த பழக்கத்தில் அஜீத்திடம் கூட அப்பாயின்ட் கேட்டு காத்திருக்கிறாராம். இது தவிர நிறைய புது முயற்சிகள் கூட. ஐயோ பாவம்… எல்லா இடத்திலிருந்தும் நெகட்டிவ் ரிசல்ட். பாதி பேர் இவர் லைனுக்கு வரவேயில்லையாம்.

இந்த நேரத்தில்தான் அந்த போன். எதிர்முனையில் பேசியிருக்கிறார் எடிட்டர் மோகன். தனது மகன்களை வைத்து தமிழ்சினிமாவில் ஏராளமான ஹிட்டுகளை கொடுத்தவர். அதுவும் அந்த குடும்பத்தின் தற்போதைய பொசிஷனே வேறு. தனி ஒருவன் படத்தின் மூலம் அவர் வீட்டிலிருந்து இப்போது இரண்டு சிங்கங்களுக்கு மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது. மார்க்கெட்டில் பல கோடியளவுக்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது. ஜெயம் ரவி கால்ஷீட் இருக்கிறதென்றால், கண்ணை மூடிக் கொண்டு பைனான்ஸ் பண்ண மஹாலட்சுமி புருஷர்களும் தவம் கிடக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

லிங்குசாமியிடம் பேசிய எடிட்டர் மோகன், “தம்பி… கவலைப்படாதீங்க. உங்க பிரச்சனையிலிருந்து நீங்க நிச்சயம் வெளியே வந்துடுவீங்க. ஜெயம் ரவியை உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க சொல்றேன். தற்போது இருக்கும் சில கமிட்மென்ட்டுகள் முடியட்டும். உங்களுக்கு பக்கபலமா நான் இருக்கேன்” என்றாராம்.

கொஞ்ச காலமாகவே முதுகில் குத்து வாங்கியே பழகிய லிங்குசாமிக்கு, எடிட்டர் மோகனின் இந்த ஆறுதல் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும். மோகன் போன்ற நல்ல மனசுக்காரர்கள் இருந்தால் தோற்றவர் எவருக்கும் முடக்கம் இல்லை!

editor MohanjayamravikarthilingusamyRajinimuruganSlidesurya
Comments (0)
Add Comment