குட் டச்… பேட் டச்… பெண் தேவதைகளுக்கு ஆண் தேவதையின் அட்வைஸ்!

முரட்டுக்குத்து காலத்தில் இருக்கிறது தமிழ்சினிமா என்று முட்டுக்கட்டை போடுகிற அத்தனை பேருக்கும், இரும்புத்திரை வந்து “இருக்கேண்டா நானும்” என்றதுதான் ஆச்சர்யம். “நல்லக் கருத்துக்களை சொல்கிற படங்களுக்கு ஆறுதலா நாங்க இருக்கோம்” என்று வரிந்து கட்டுகிற ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பெரிய ஆறுதல்?

முரட்டுக்குத்து படம் வந்து கலெக்ஷன் தாறுமாறு என்று கேள்விப்பட்ட நாளில் இருந்தே பதறிப்போயிருந்த நல்லப்பட இயக்குனர்கள், அவரவர் பங்குக்கு ஆங்காங்கே கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பதற்றம்… வேறென்ன?

அந்த வகையில் பதறிப்போயிருந்த இயக்குனர் தாமிராவுக்கு ஆண்தேவதை படத்தின் சில நிமிஷ காட்சி அடங்கிய கிளிப்பிங்ஸ் பெருத்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சமுத்திரக்கனி சுமார் ஒரு டஜன் குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுவதுதான் அந்தக்காட்சி.

பெண்குழந்தைகளிடம் அத்துமீறுகிற சிலர் சமுதாயத்தில் கணிசமான அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே பெரிய ஷாக். தன்னை தொடுவது எந்த அர்த்தத்தில் என்பதைக் கூட உணராத பெண் குழந்தைகள், பின்னாளில் எவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதும் அதே அளவுக்குண்டான ஷாக்தான். இதையெல்லாம் போக்குகிற விதத்தில் அந்த குழந்தைகளுக்கு குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்றால் என்று சமுத்திரக்கனி விளக்குவது போல காட்சி.

இந்த காட்சிக்குதான் இணைய உலகத்தில் அவ்வளவு வரவேற்பு. சுமார் 7 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோ காட்சியை பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். விடுமுறை காலமாக இல்லாமலிருந்தால், இந்த காட்சி பள்ளிகள் தோறும் ஒளிபரப்பப்பட்டிருக்கும். அந்தளவுக்கு நேர்த்தியாகவும் உண்மையாகவும் ஒரு விஷயத்தை நாட்டுக்கு சொல்லியிருக்கும் இயக்குனர் தாமிராவுக்கு திரையுலகத்திலிருந்து பாராட்டுகள் குவிகிறது.

படமும் அதே தரத்தோடு இருக்கும் என்று நம்புவோம். முரட்டுக்குத்துகளுக்கு நாம் தர வேண்டியது அதைவிட பலமான எதிர் குத்துகள்தான். வாங்க… ஆண் தேவதைகளை அர்ச்சிக்கலாம்!

Samuthirakani advised female child's
Comments (0)
Add Comment