மயக்கத்தில் சந்தானம்! மருந்து தெளித்த தயாரிப்பாளர்?

‘தயாரிப்பு செலவை குறைச்சாகணும்…’ இதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய ராஜ கட்டளை! “குறைக்கறது நல்லதுதான். அதுக்காக குரல்வளையில கைய வைக்கணுமா?” என்று வேறொரு குரூப் கதறாத குறையாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. தயாரிப்பு செலவு தாறுமாறாக கசியாமலிருக்க சங்கம் கட்டியிருக்கும் முதல் தடுப்பணை, டி.விக்களுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இதில் ஏகப்பட்ட கருத்து மாறுபாடுகள். அதுவும் சங்க உறுப்பினர்களுக்குள்ளேயே? “விளம்பரம் மட்டும்தான் இப்போ பிரச்சனை என்பது மாதிரி பேசுற அத்தனை பேரும், நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க மாட்டேங்குறாங்களே? அது குறைஞ்சா தயாரிப்பு செலவை பெருமளவு குறைக்கலாமே?’’ இது வேறொரு தரப்பின் புலம்பல்.

அதை நிரூபிப்பது மாதிரி ஒரு சம்பவம்.

சமீபத்தில் விநியோகஸ்தர் ஒருவர் படம் தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அவர் முதலில் பேசியதே சந்தானத்திடம்தான். யார் டைரக்டர்? என்ன கதை? என்பதையெல்லாம் சுருக்கமாக கேட்டுக் கொண்ட சந்தானம், “எனக்கு யாரும் மேனேஜர் கிடையாது. அதனால் நானே சம்பளம் பற்றி பேசுகிறேன்” என்று கூறியிருக்கிறார். விநியோகஸ்தரும் சந்தோஷமாக, “நடுவுல எதுக்கு பூசாரி. நீங்களே வரம் கொடுங்க” என்று இறைஞ்சி நிற்க, அவர் கேட்ட தொகை… ரொம்ப ரொம்ப கெட்ட தொகை!

விநியோகஸ்தராச்சே. சமீபத்தில் சந்தானம் நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த ஒரு புதிய படத்தின் ரெக்கார்ட்டை ஆதாரத்தோடு அங்கேயே விரித்து காட்டினாராம். “உங்க சம்பளம் நாலு. ஆர்யா சம்பளம் அஞ்சு. அதுவே ஒன்பதாயிருச்சு. இதர செலவுகள் மூணு. கிட்டதட்ட 12 கோடிக்கு தயாரான அந்த படத்தின் வியாபாரம், மற்றும் கலெக்ஷன் எவ்ளோ தெரியுங்களா? இந்தா பாருங்க” என்று காட்ட, ஆடிப்போனாராம் சந்துஸ்… கூட்டி கழித்து குமுறி குமுறி புரட்டியதில் ஏழு கோடிதான் தேறியதாம் தயாரிப்பாளருக்கு.

“இப்பவும் அதே சம்பளம்தான் வேணுமா?” என்று இவர் கேட்க, “உங்க படமே வேணாம். போயிட்டு வாங்க” என்று புன் சிரிப்போடு அனுப்பி வைத்தாராம் சந்தானம். என்ன செய்தார் தயாரிப்பாளர். “படம் எடுப்பியா படம் எடுப்பியா?” என்று சொந்த மூக்குக்கு நேரே தனது சொந்த விரலை நீட்டி எச்சரித்துவிட்டு, ஊருக்கு நடையை கட்டினாராம். சந்தானத்தின் பிடிவாதத்தால் தோப்பு தொறவாவது மிஞ்சுச்சு!

Advt.aryasalarysanthanamSlidetfpcTVbanedVSOP
Comments (0)
Add Comment