ஜெயம் ரவி கொடுத்த ஷாக்? படம் ஆரம்ப நிலையிலேயே அவுட்!

அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு… வழக்கம் போல படம் டிராப்.

பேசா மடந்தை, மவுனக்குழந்தை என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் வெற்றிக்குப்பின் தலைகால் புரியாமல் ஆடுவதாக கூறுகிறது கோடம்பாக்கம். “எனக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்பவும் மரியாதை இருந்ததில்ல” என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்திலேயே பேசுகிற அளவுக்கு போனது அந்த தலைகால் விவகாரம். தற்போது ஜெயம் ரவி கேட்கும் சம்பளம், புரூனே சுல்தானின் ஒரு மாசத்து செலவுக்கு ஈடாக இருப்பதாக கதைக்கிறார்கள் இங்கே. இந்த நிலையில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் லெமூரியா கண்டம் பற்றிய படம் ஒன்றில் அவர் நடிக்கப் போவதாக செய்தி. நாமும் அதை விலாவாரியாக வெளியிட்டிருந்தோம். ஆனால் ஆரம்ப நிலையிலேயே அதற்கு மூடுவிழா கண்டுவிட்டாராம் ரவி. எப்படி?

ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஒரு கண்டமே திடீரென அழிவுக்கு ஆளாகி காணாமல் போவது போலவும் அதிலிருந்து ஹீரோ எப்படி தப்பித்து வெளியேறினார் என்பதை பற்றியுமான கதை இது என்பதால், செலவு செக்கு ஆட்ட விட்ரும் என்பதை நன்கு புரிந்தே இந்த படத்தை தயாரிக்க முன் வந்தாராம் மேற்படி தயாரிப்பாளர். இதுபோன்ற கதைகளை எடுப்பதற்கு கோடம்பாக்கத்தில் இவரைப்போல ஒன்றிரண்டு தயாரிப்பாளர்கள்தான் இருக்கிறார்கள். அவ்வளவு செலவை இழுத்துவிடும் சப்ஜெக்டில் நடிக்க ஆசைப்படும் ஹீரோ, அதற்கான சலுகையை தயாரிப்பாளருக்கும் தர வேண்டும் அல்லவா? என் சம்பளம் இவ்வளவு… என்று ஜெயம் ரவி ஒரு தொகையை சொல்ல, நெஞ்சை பிடித்துக் கொள்ளாத குறையாக ஷாக் ஆனாராம் தயாரிப்பாளர்.

“வேணும்னா ஒண்ணு பண்ணலாம். படத்தை எடுப்போம். ரிலீஸ் பண்ணுவோம். வர்ற கலெக்ஷன்ல உங்களுக்கு இவ்வளவு. எங்களுக்கு இவ்வளவு” என்று வேறொரு கணக்குக்குள் ஜெயம் ரவியை இழுத்தாராம் தயாரிப்பாளர். இப்போது ஜெயம் ரவி நெஞ்சை பிடித்துக் கொண்டதாக தகவல். பீர் பாட்டில் ஓப்பன் பண்ணுவதற்கு முன்பே நுரையாக பொங்கி தரையெல்லாம் சிந்தி காலியாகிவிட்டது.

இனி லெமூரியா கண்டமாவது. பயோரியா பல்பொடியாவது? விரக்தியில் வேறொரு வெளிநாட்டு டி.வி.டியை தூசு தட்டிக் கொண்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

agsalvijayDropjayamravilemuria gandamsalarySlideThanioruvan
Comments (0)
Add Comment